முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சேலத்தில் இருந்து கார் மூலமாக கோவைக்கு நாளை காலை 11 மணிக்கு வருகிறார். பின்னர் கோவை கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து துறை அதிகாரிகள் பங்கு பெறும் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.
கோவை அரசு கலை, அறிவியல் கல்லூரி கொரோனா சிறப்பு சிகிச்சை மையமாக மாற்றப்பட்டு அங்கு 250 படுக்கைகள் அமைக்கப்பட்டு உள்ளது. ஆலோசனை கூட்டம் முடிந்ததும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவை கலை, அறிவியல் கல்லூரிக்கு செல்கிறார். அங்கு கொரேனா சிறப்பு சிகிச்சை மையத்தை திறந்து வைத்து பார்வையிடுகிறார். பின்னர் அரசினர் விருந்தினர் மாளிகைக்கு சென்று மதிய உணவு முடித்த பின்னர் விமானம் மூலமாக சென்னைக்கு புறப்பட்டு செல்கிறார்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி சட்டம், ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி. தாமரை கண்ணன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.