முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் லண்டன் செல்கிறார்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ் நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக கடந்த மார்ச் மாதம் 24ந்தேதி 4 நாள் பயணமாக துபாய் நாட்டுக்கு சென்று வந்தார்.

அப்போது அங்கு ‘துபாய் எக்ஸ்போ’ சர்வதேச தொழில் கண்காட்சியில் தமிழக அரங்கினை திறந்து வைத்தார். அதன் பிறகு அங்கு தொழில் அதிபர்களை சந்தித்து தமிழ்நாட்டில் தொழில் தொடங்குமாறு அழைப்பு விடுத்தார். 2 நாட்களாக துபாயில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.

இதைத் தொடர்ந்து அபுதாபி சென்றார். அபுதாபி பயணம் மூலமும் ஏராளமான தொழில் அதிபர்கள் தமிழகத்தில் தொழில் தொடங்க முன்வந்தனர். துபாய்அபுதாபி பயணம் மூலம் தமிழ்நாட்டுக்கு மொத்தம் ரூ.2,600 கோடிக்கான முதலீடுகள் பெறப்பட்டது. இதன் மூலம் 9,700 பேர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தும் விதமாக ஐக்கிய அரபு நாடுகளின் முன்னணி நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

அப்போது பராபி பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி முகம்மது அல் வாதேயுடனான சந்திப்பின் போது, தமிழகத்தில் உள்ள 4 பெரும் துறைமுகங்களில் சாலைகள் மற்றும் ரெயில் இணைப்புகள் பற்றியும், திறன்மிகு பணியாளர்கள் மேம்பட்ட வணிக சூழல் போன்றவற்றை எடுத்துக் கூறி தமிழகத்தில் ஒரு ரசாயன வளாகம் அமைப்பதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய்ந்திடுமாறும் கேட்டுக் கொண்டார்.

இதைத் தொடர்ந்து தமிழகத்திற்கு புதிய தொழில்கள் வருவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தற்போது தி.மு.க. ஆட்சிக்கு வந்து 1 ஆண்டு நிறைவு பெற்று 2ம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளதால் இந்த ஆண்டிலும் தமிழகத்தின் வளர்ச்சிக்கு ஏராளமான திட்டங்களை செயல்படுத்த முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்துள்ளார்.

இதையொட்டி மீண்டும் வெளிநாடுகளுக்கு சென்று தமிழகத்துக்கு தொழில் முதலீடுகளை ஈர்த்து வர திட்டமிட்டுள்ளார். இதற்காக அடுத்த மாதம் (ஜூன்) லண்டன் செல்ல முதல்/அமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்துள்ளார்.

தற்போது நடைபெற்று வரும் சட்டசபை கூட்டத் தொடர் நாளையுடன் (10ந்தேதி) முடிவடைவதால் அதன்பிறகு மு.க.ஸ்டாலினின் சுற்றுப்பயண விவரங்கள் தயாரிக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அடுத்த மாதம் (ஜூன்) லண்டன் சென்று தொழில் முதலீட்டாளர்களை சந்திப்பார் என்றும், அதன்பிறகு ஜூலை மாதம் அமெரிக்கா செல்லும் வகையில் அவரது சுற்றுப்பயணம் அமையும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதையொட்டி தொழில்துறை அதிகாரிகள் லண்டன், அமெரிக்காவில் உள்ள 20க்கும் மேற்பட்ட தொழில் நிறுவன அதிகாரிகளுடன் இப்போதே பேச்சுவார்த்தை நடத்த தொடங்கி உள்ளனர். முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கு செல்லும்போது புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools