Tamilசெய்திகள்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம்

நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கக் கோரிய சட்ட மசோதாவை  ஆளுநர்  திருப்பி அனுப்பியது, தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் நீட் விலக்கு மசோதா தொடர்பாக அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசிப்பதற்காக இன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது.

தலைமைச் செயலகத்தில் உள்ள, நாமக்கல் கவிஞர் மாளிகையில்,  காலை 11:00 மணிக்கு இந்த கூட்டம் தொடங்குகிறது. முதலமைச்சர் ஸ்டாலின்தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை என, பா.ஜ.க. அறிவித்துள்ளது.

தமிழக சட்டசபையில் இடம்பெற்றுள்ள தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ், பா.ம.க., ம.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, புரட்சி பாரதம் ஆகிய 12 கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொள்கிறார்கள்.

இன்றைய ஆலோசனை கூட்டத்தில் சட்டசபை சிறப்பு கூட்டத்தை கூட்டி, மீண்டும் நீட் விலக்கு தீர்மானம் நிறைவேற்றுவது குறித்து, முடிவெடுக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.