X

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் ஆட்சியை புகழ்ந்த நடிகர் பவன் கல்யாண்

தமிழக முதல்வராக கடந்த மே மாதம் மு.க.ஸ்டாலின் பதவி ஏற்றார். பெண்களுக்கு இலவச பஸ் பயணம், அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் திட்டம், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இலவச பஸ் வசதி, வீடு தேடி வந்து மருத்துவம் பார்க்கும் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார்.

இந்த திட்டங்களால் ஈர்க்கப்பட்ட தெலுங்கு சூப்பர் ஸ்டாரும், ஜனசேனா கட்சித் தலைவரும், நடிகருமான பவன்கல்யாண் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களை பாராட்டி வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பவன் கல்யாண் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தி:

அன்பிற்குரிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். எந்த ஒரு கட்சியாக இருந்தாலும் ஆட்சிக்கு வரவேண்டும் என்றால் அரசியல் செய்ய வேண்டும். ஆனால் ஒரு கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு அரசியல் செய்யக்கூடாது. அதை வார்த்தைகளால் அல்ல, செயல்களால் நீங்கள் செய்து வருகிறீர்கள்.

உங்களது ஆட்சி நிர்வாகம், உங்கள் அரசின் செயல்பாடுகள் உங்கள் மாநிலத்திற்கு மட்டுமல்ல நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் ஊக்கம் அளிக்கும் விதத்தில் உள்ளது. உங்களுக்கு மீண்டும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் என பாராட்டி பதிவிட்டுள்ளார்.