புதுவை அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மத்திய அரசு நிர்வாகத்தின் நேரடி கட்டுப்பாட்டில் இருக்கும் புதுவை யூனியன் பிரதேச முதல்-அமைச்சர் அரசியல் சுயநலத்துக்காக தமிழகத்துடன் புதுவையை இணைக்க முயற்சிப்பதாக விமர்சித்து மாநில மக்களுக்கு தீங்கு இழைத்து வருகிறார். புதுவை யூனியன் பிரதேசம் என்பதால் அதற்கான அதிகாரம் அனைத்தும் மத்திய அரசிடம் தான் உள்ளது. அப்படி இருக்க மற்றொரு மாநிலத்திடம் மத்திய அரசு புதுவையை ஏன் இணைக்கப் போகிறது?
இதுபற்றி முதல்-அமைச்சர் நாராயணசாமி ஆதாரமின்றி தொடர்ந்து பொய் பிரசாரம் செய்து வருகிறார். இதனால் மத்திய அரசுக்கு என்ன ஆதாயம்? ஒரு மாநில முதல்-அமைச்சர் ஆதாரத்துடன்தான் எதையும் பேசவேண்டும்.
மத்திய அரசு இதுசம்பந்தமாக கடிதப்போக்குவரத்தை ஆரம்பித்துள்ளதா? என்பதை தெளிவுபடுத்த வேண்டும். மாறாக எங்களது அதிகாரத்தை மத்திய அரசு பறிக்கிறது, அதனால் தமிழகத்தோடு புதுச்சேரியை இணைக்கிறது என்று கூறுவது முதல்-அமைச்சருக்கு அழகல்ல.
வரும் தேர்தலில் காங்கிரசும், தி.மு.க.வும் வெற்றிபெற வேண்டும் என்ற ஒரே எண்ணத்திற்காக பொய்செய்தியை மக்கள் மனதில் விதைக்கிறார். தேசவிரோத பொய்யை முன்னிறுத்தி சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள புதுவை மாநில காங்கிரசும், தி.மு.க.வும் முன்வந்துள்ளது.
இதுதொடர்பாக தலைமைக் கழகத்தின் அனுமதி பெற்று புதுச்சேரி அ.தி.மு.க. சார்பில் இந்திய தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிப்போம். முதல்-அமைச்சர் நாராயணசாமி இப்போது இணைப்பு என்ற பொய்பிரசாரத்தை கையில் எடுத்துள்ளார். இதை நம்புவதற்கு மக்கள் ஒன்றும் ஏமாளிகள் அல்ல என்பதை வரும் சட்டமன்ற தேர்தல் இவருக்கு புரிய வைக்கும்.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.