முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு எதிராக அரசு ஊழியர்கள் திடீர் போராட்டம்!
சித்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஜெகன்மோகன் ரெட்டி அரசை கண்டித்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட அரசு ஊழியர்கள் மாபெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முன்னதாக சித்தூர் காந்தி சிலை அருகே இருந்து கலெக்டர் அலுவலகம் வரை பேரணியாக வந்தனர். மாநில அரசு ஊழியர்கள் சங்கம் (ஏ.பி.என்.ஜி.ஓ) மாவட்ட தலைவர் ராகவலு தலைமை தாங்கினார்.
ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தேர்தலின் போது மாநிலம் முழுவதும் பாதயாத்திரை மேற்கொண்டார். அப்போது பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தி புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்வேன் என வாக்குறுதியளித்தார்.
இதனால் அனைத்து அரசு ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்கள் அனைவரும் ஜெகன்மோகன் ரெட்டி கட்சிக்கு வாக்களித்து மாபெரும் வெற்றி பெற செய்தனர்.
ஆனால் முதல்வராக பொறுப்பெற்ற பிறகு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற தவறி விட்டார்.
கடந்த வாரம் அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்படுவதாக நள்ளிரவில் அரசாணையை முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி வெளியிட்டார். அதில் அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்கவில்லை.
அதற்கு பதிலாக பிட்மெண்ட் 23 சதவிகிதம் உயர்த்தியுள்ளார். இதனால் அரசு ஊழியர்களுக்கு எந்த பயனுமில்லை. நகரங்களுக்கு எச்ஆர் தொகை மிகவும் குறைத்துள்ளார். கிராமங்களில் எச்ஆர் உயர்த்தியுள்ளார்.
என்.ஜி.ஓ. ஊழியர் சங்கம் உத்தரவின்படி மாநிலம் முழுவதும் அரசுதுறையில் பணிபுரியும் பல்வேறு ஊழியர் சங்கம் சார்பில் 13 மாவட்டங்களில் உள்ள கலெக்டர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம்.
சித்தூர் மாவட்டம் முழுவதும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பல்வேறு துறையை சேர்ந்த அரசு ஊழியர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு மாபெரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம்.
எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து அம்பேத்கர் சிலைக்கு ஊர்வலமாக சென்று மனு வழங்க உள்ளோம்.
இதற்கும் மாநில அரசு செவிசாய்க்காவிட்டால் அடுத்த மாதம் 7-ந்தேதி அமராவதியில் உள்ள தலைமை செயலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றார்.