X

முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு திருப்பதி கோவிலில் சாமி தரிசனம்

ஆந்திராவில் 4-வது முறையாக முதல்-மந்திரியாக சந்திரபாபு நாயுடு நேற்று பதவி ஏற்றார். இதையடுத்து நேற்று மாலை தனது மனைவி புவனேஸ்வரி, மகன் லோகேஷ், மருமகள் பிராமணி, பேரன் தேவன்ஷ் ஆகியோருடன் சிறப்பு விமானம் மூலம் ரேணிகுண்டா விமான நிலையத்திற்கு வந்தார்.

விமான நிலையத்திற்கு வந்த சந்திரபாபு நாயுடுவுக்கு அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். பின்னர் திருப்பதி மலைக்கு சந்திரபாபு நாயுடு வந்தார். அவருக்கு திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் வரவேற்பு அளித்தனர். நேற்றிரவு தனது குடும்பத்தினருடன் திருப்பதி மலையில் உள்ள தேவஸ்தான விருந்தினர் மாளிகையில் தங்கினார்.

இன்று காலை வி.வி.ஐ.பி பிரேக் தரிசனத்தில் சந்திரபாபு நாயுடு ஏழுமலையானை தரிசனம் செய்தார். சந்திரபாபு நாயுடு குடும்பத்தினருக்கு திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் பட்டு வஸ்திரம் மற்றும் பிரசாதங்களை வழங்கி கவுரவித்தனர்.
முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு வருகையொட்டி ரேணிகுண்டா விமான நிலையம் முதல் திருப்பதி வரை பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. இதே போல் திருப்பதி மலைப்பாதையில் திரைகள் அமைக்கப்பட்டு இருந்தன. இதனைக் கண்ட சந்திரபாபு நாயுடு மக்களிடம் இருந்து தன்னை வேறுபடுத்தி பார்க்கும் இந்த செயலில் அதிகாரிகள் யாரும் ஈடுபடக்கூடாது.

மலைப்பாதையில் கட்டப்பட்டுள்ள அனைத்து திரைகளும் உடனடியாக அகற்ற வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அவரது உத்தரவின் பேரில் மலை பாதையில் கட்டப்பட்டிருந்த திரைகள் உடனடியாக அகற்றப்பட்டன. முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு வருகையொட்டி தெலுங்கு தேசம் கட்சி தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் திருப்பதி மலையில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.