இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை மையப்படுத்தி ‘800’ என்கிற படம் உருவாகவுள்ளது. ஸ்ரீபதி ரங்கசாமி இயக்கும் இந்த படத்தில் முத்தையா முரளிதரனாக விஜய் சேதுபதி நடிக்கிறார். இதற்கான அறிவிப்பு வெளியானதில் இருந்தே இப்படத்திற்கான எதிர்ப்பும் அதிகரித்தது.
படத்தில் அரசியல் சார்ந்த காட்சிகள் இல்லை என 800 படத்தின் தயாரிப்பு நிறுவனம் ஏற்கனவே உறுதி அளித்தது. இருப்பினும் ஈழத்தமிழர்களுக்கு எதிரானவர்களுக்கு முத்தையா முரளிதரன் ஆதரவளித்தவர் என்பதால் படத்தில் நடிக்கும் முடிவை விஜய் சேதுபதி கைவிட வேண்டும் என இயக்குனர் பாரதிராஜா, சீனு ராமசாமி, சேரன் பாடலாசிரியர் வைரமுத்து, தாமரை உள்ளிட்டோர் கோரிக்கை வைத்திருந்தனர்.
சில மணிநேரங்களுக்கு முன்னதாக இத்திரைப்படத்தில் இருந்து விலகிக் கொள்ளுமாறு விஜய் சேதுபதிக்கு வேண்டுகோள் விடுத்து முரளிதரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். இதற்கு டுவிட்டரில் பதிலளித்துள்ள விஜய் சேதுபதி, முரளிதரனின் அறிக்கையை குறிப்பிட்டு நன்றி வணக்கம் என பதிவிட்டுள்ளார். இதன்மூலம் விஜய் சேதுபதி இப்படத்தில் இருந்து விலகிவிட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், முதலமைச்சரை நேரில் சந்தித்து இருக்கிறார் விஜய் சேதுபதி. சில தினங்களுக்கு முன்பு முதலமைச்சர் தாயார் காலமானார். இவரது மறைவையொட்டி பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்திற்கு நேரில் சென்று முதலமைச்சருக்கு ஆறுதல் கூறினார்.