Tamilசினிமா

முடிந்தால் தடுத்து பாருங்கள் – நடிகை கங்கனா ரணாவத் சவால்

சுஷாந்த் சிங் தற்கொலைக்கு பிறகு இந்தியில் வாரிசு நடிகர்கள் ஆதிக்கம், போதை பொருள் புழக்கம் உள்ளது என்றெல்லாம் நடிகை கங்கனா ரணாவத் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார். மராட்டிய அரசியல்வாதிகளும் மும்பை போலீசாரும் வாரிசு நடிகர்களுக்கு ஆதரவாக இருப்பதாக சாடினார். இதற்கு எதிர்ப்புகளும் கிளம்பின.

இதுதொடர்பாக சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கூறும்போது, கங்கனா மராட்டியத்தையும், மும்பை போலீசையும் அவமானப்படுத்தி உள்ளார். பயம் இருந்தால் மும்பைக்கு திரும்ப வரவேண்டாம் என்று கூறியிருந்தார்.

மராட்டிய மந்திரி அனில் தேஷ்முக் கூறும்போது, மும்பை போலீசார் ஸ்காட்லாந்து யார்டு போலீசுக்கு இணையானவர்கள். மும்பை போலீசை குற்றம் சாட்டும் கங்கனா ரணாவத்துக்கு மும்பையிலோ அல்லது மராட்டிய மாநிலத்திலோ வாழ உரிமை இல்லை என்று கூறினார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் கங்கனா ரணாவத் டுவிட்டரில், “நான் மும்பைக்கு வரவேண்டாம் என்று பலரும் என்னை அச்சுறுத்துகிறார்கள். வருகிற செப்டம்பர் 9-ந்தேதி மும்பை வருகிறேன். முடிந்தால் என்னை தடுத்துப் பாருங்கள்” என்று சவால் விடுத்துள்ளார். கங்கனா தற்போது சொந்த ஊரான மணாலியில் தங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.