Tamilசெய்திகள்

முடிந்தால் என் நடைப்பயணத்தை தடுத்து பாருங்கள் – மகாராஷ்டிர அரசுக்கு ராகுல் காந்தி சவால்

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நடைபயணம் மேற்கொண்டுள்ளார். மகாராஷ்டிராவில் அவரது நடைபயணம் நடைபெற்று வரும் நிலையில் அவர் நேற்று முன்தினம் வாஷிம் பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசும் போது, சுதந்திர போராட்ட வீரர் வீர சாவர்க்கரை பற்றி கடுமையாக தாக்கி பேசினார்.

அப்போது அவர், “சாவர்க்கர் பா.ஜனதா மற்றும் ஆர்.ஆர்.எஸ். அமைப்பின் அடையாளம். அவர் அந்தமான் ஜெயிலில் 2 ஆண்டுகள் அடைக்கப்பட்டார். அப்போது அவர் ஆங்கிலேய ஆட்சியாளர்களுக்கு மன்னிப்பு கடிதங்கள் எழுத தொடங்கினார். சாவர்க்கர் தன்னைப்பற்றி வேறு ஒருவரின் பெயரில் புத்தகம் எழுதியுள்ளார். அதில் தான் வீரமிக்கவர் என கூறியுள்ளார். அவர் ஆங்கிலேய அரசிடம் இருந்து ஓய்வூதியம் பெற்று வந்தார். அவர்களுக்காக வேலை செய்தார். காங்கிரசுக்கு எதிராக வேலை பார்த்தார்” என்று பேசினார்.

வீரசாவர்க்கர் மராட்டியத்தை சேர்ந்தவர் என்ற நிலையில் ராகுல்காந்தியின் இந்த குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தியது. வீர சாவர்க்கரை அவமதித்த ராகுல்காந்தியின் நடைபயணம் மகாராஷ்டிராவில் நிறுத்தப்பட வேண்டும் என முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே கட்சியை சேர்ந்த எம்.பி. ராகுல் செவாலே அரசை வலியுறுத்தினார்.

இந்த நிலையில் நேற்று ராகுல்காந்தியின் நடைபயணம் 71-வது நாளாக நடந்தது. மகாராஷ்டிராவில் உள்ள அகோலா மாவட்டத்தில் அவர் நடைபயணத்தை தொடர்ந்தார். அப்போது அவருடன் நடிகை ரியாசென் பங்கேற்றார். நடைபயணத்துக்கு மத்தியில் ராகுல்காந்தி நிருபர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது வீர சாவர்க்கர் மீது அவர் மீண்டும் தனது குற்றச்சாட்டை முன்வைத்தார். மேலும் வீரசாவர்க்கர் ஆங்கிலேய ஆட்சியாளர்களுக்கு எழுதியதாக கூறப்படும் கடிதத்தை நிருபர்களிடம் ராகுல்காந்தி காண்பித்தார்.

“உங்களுக்கு மிகவும் கீழ்ப்படிதலுள்ள வேலைக்காரனாக இருக்க நான் கெஞ்சுகிறேன்” என்று கடைசி வரியில் வீரசாவர்க்கர் குறிப்பிட்டு இருப்பதை ராகுல்காந்தி படித்து காட்டினார். மேலும் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- நான் வீரசாவர்க்கரை பற்றி கூறிய கருத்துக்களை ஆதாரத்துடன் தெரிவித்துள்ளேன். பயம் காரணமாக தான் சாவர்க்கர் கருணை கடிதத்தை எழுதினார். மேலும் அவர் ஆங்கிலேய அரசுக்கு உதவியது தெளிவாகிறது. இது மகாத்மா காந்தி, சர்தார் வல்லபாய் படேல், நேரு போன்ற சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு அவர் செய்த துரோகம். சிலர் எனது நடைபயணத்தை நிறுத்த வேண்டும் என்று கூறுகிறார்கள். வேண்டுமென்றால் எனது நடைபயணத்தை மகாராஷ்டிரா அரசு நிறுத்தி பார்க்கட்டும்.

இதற்கிடையே ராகுல்காந்தியின் பேச்சுக்கு பா.ஜனதா மற்றும் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டேயின் சிவசேனா கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. இதுதொடர்பாக முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே கூறுகையில், ” எந்த சூழ்நிலையிலும் வீரசாவர்க்கர் அவமதிக்கப்படுவதை மகாராஷ்டிரா மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் ” என்றார்.

மகாராஷ்டிரா துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், ” ராகுல் காந்தி வெட்கமே இல்லாமல் வீரசாவர்க்கர் பற்றி பொய் பேசி வருகிறார். மகாராஷ்டிரா மக்கள் காங்கிரஸ் கட்சியினருக்கு தகுந்த நேரத்தில் உரிய பதிலடி கொடுப்பார்கள். வீர சாவர்க்கர் போல எத்தனை காங்கிரஸ் தலைவர்கள் 11 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்து உள்ளனர். அந்த கொடுமையிலும் அவர் சுதந்திரத்துக்காக பாடல் எழுதினார். மற்றவர் எழுதி கொடுப்பதை ராகுல்காந்தி வாசிக்கிறார். அந்த முட்டாள்களுக்கு வீர சாவர்க்கர் எத்தனை ஆண்டுகள் ஜெயிலில் இருந்தார் என்பது கூட தெரியாது” என கூறினார்.

வீரசாவர்க்கர் பற்றிய ராகுல்காந்தியின் கருத்தில் தான் உடன்படவில்லை என்று மகாராஷ்டிராவில் காங்கிரசுடன் கூட்டணி வைத்திருக்கும் முன்னாள் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேயும் கூறியிருக்கிறார்.