முக கவசம் அணியாவிட்டால் ரூ.200 அபராதம் – மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு
கொரோனா நோய் தொற்று மீண்டும் அதிகமாக பரவி வருவதையடுத்து தமிழ்நாட்டில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. நாளை முதல் இது அமலுக்கு வருகிறது.
இந்த நிலையில் சென்னை மாநகராட்சியும் நோயை கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது. பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. இதை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட உள்ளது.
இது தொடர்பாக சென்னை மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் ஆணை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறி இருப்பதாவது:-
தற்போது கொரோனா நோய் தொற்றின் 2-வது அலை அதிகரித்து வருவதால் நோய் தொற்று பரவலை தடுக்க முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகிறது.
இதற்காக பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. அதை மீறினால் அபராதம் விதிப்பதுடன் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
கொரோனா நிபந்தனைகளை கடைபிடிக்காவிட்டால் அவர்களுக்கு ரூ.500 வரை அபராதம் விதிக்கப்படும். முக கவசம் அணியாவிட்டால் ரூ.200 செலுத்த வேண்டும். முக கவசத்தை வாய் மற்றும் மூக்கு மூடி இருக்கும் வகையில் கண்டிப்பாக அணிந்திருக்க வேண்டும்.
பொது இடத்தில் எச்சில் துப்பினால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும்.
பொதுமக்கள் கூடும் இடங்களில் கண்டிப்பாக சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும். அதை மீறுபவர்கள் ரூ.500 அபராதம் செலுத்த வேண்டும்.
சலூன்கள், அழகு நிலையங்கள், “ஜிம்”கள், வர்த்தக நிறுவனங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் கொரோனா விதிமுறைகளை பின்பற்றாவிட்டால் அவர்கள் ரூ.5 ஆயிரம் அபராதம் செலுத்த வேண்டும்.
நோய் கட்டுப்பாட்டு மண்டலங்களில் விதிமுறைகளை மீறும் தனி நபர்களுக்கு ரூ.500-ம், வாகனம் மற்றும் வர்த்தக நிறுவனங்களுக்கு ரூ.5 ஆயிரமும் அபராதம் விதிக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் கொரோனா விதிமுறைகளை எவ்வாறு பின்பற்ற வேண்டும் என்பது பற்றிய அறிவிப்பும் மாநகராட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ளன. அதன் விவரம்:-
* அனைவரும் முக கவசம் அணிந்திருக்க வேண்டும்.
* குறைந்தபட்சம் 6 அடி இடைவெளியுடன் கூடிய சமூக இடைவெளியை எப்போதும் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்.
* அனைத்து பணியாளர்களுக்கும் கபசுர குடிநீர், நிலவேம்பு குடிநீர், மல்டிவிட்டமின் மாத்திரை, ஜிங்க் மாத்திரை போன்றவை நிறுவன உரிமையாளர்களால் வழங்கப்பட வேண்டும்.
* கடைகள், வணிக வளாகங்கள், அலுவலக பணியிடங்களில் இருக்கும் கதவு கைப்பிடிகள், லிப்ட் பொத்தான்கள், மேஜை நாற்காலிகள், கழிவறை சாதனங்கள் போன்றவற்றிலும் அலுவலக வளாகம், பொது இடங்களிலும் அடிக்கடி கிருமி நாசினி தெளிக்க வேண்டும்.
* வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள், கடைகள் ஆகியவற்றின் முகப்பு வாயிலில் தெர்மல் ஸ்கேனர் மூலம் வெப்ப பரிசோதனை செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும்.
* கடை, நிறுவனம், அலுவலகம் மற்றும் பணியிடங்களில் ‘பிங்கர்டிரிப் பல்ஸ்ஆக்சிமீட்டர்’ கருவி வைத்திருக்க வேண்டும்.
* பணியாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் பயன்படுத்தும் முக கவசம், கையுறை போன்றவற்றை உரிய முறையில் அகற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.