Tamilசெய்திகள்

முக கவசம் அணியாதவர்களிடம் அபராதமாக ரூ.1.93 கோடி வசூல்

கொரோனா தடுப்பு பணியில் தமிழக அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் முக கவசம் அணிதல், சமூக இடைவெளி பின்பற்றுதல் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்துள்ளது. இந்த கட்டுப்பாடுகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அபராதம் விதிக்கப்படும் எனவும் அறிவித்தது.

அதன் அடிப்படையில் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகளை பின்பற்றாதவர்கள் மீது நேற்றைய நிலவரப்படி ரூ.1 கோடியே 93 லட்சத்து 42 ஆயிரத்து 262 வசூலிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) நிலவரப்படி ரூ.1 கோடியே 90 லட்சத்து 85 ஆயிரத்து 462 அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது. மேலும் நேற்று மட்டும் ரூ.2 லட்சத்து 56 ஆயிரத்து 800 அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது.

அபராத தொகையில் ரூ.13 லட்சத்து 24 ஆயிரத்து 250 முக கவசம் அணியாமல் இருந்ததற்கு தாசில்தார் மூலமாக அபராதம் விதிக்கப்பட்டது. இதுவரை வசூலிக்கப்பட்ட அபராதத்தில், அதிகபட்சமாக தண்டையார்பேட்டை மண்டலத்தில் ரூ.44 லட்சத்து 7 ஆயிரத்து 700, ராயபுரத்தில் ரூ.26 லட்சத்து 73 ஆயிரத்து 850 வசூலிக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.