X

முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 1,700 கோடி டாலராக உயர்வு!

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் (ஆர்.ஐ.எல்) நிறுவனத் தலைவர் முகேஷ் அம்பானி இந்தியாவின் நம்பர் 1 கோடீஸ்வரராக உள்ளார். இம்மாத தொடக்கத்தில் வெளியிடப்பட்ட போர்ப்ஸ் பத்திரிகையின் உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் அவர் 9-வது இடத்திற்கு முன்னேறி இருக்கிறார்.

இந்நிலையில், நடப்பு ஆண்டில் டிசம்பர் 23-ந் தேதி நிலவரப்படி முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 1,700 கோடி டாலர் (சுமார் ரூ.1.20 லட்சம் கோடி) உயர்ந்து இருப்பது புளூம்பெர்க் கோடீஸ்வரர்கள் பட்டியலின் மூலம் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து அவரது மொத்த சொத்து மதிப்பு 6,100 கோடி டாலரை எட்டி இருக்கிறது. புளூம்பெர்க் பட்டியலின்படி அலிபாபா குழும நிறுவனர் ஜேக் மாவின் நிகர சொத்து மதிப்பு 1,130 கோடி டாலர் அதிகரித்து இருக்கிறது. ஜெப் பெசோஸ் சொத்து மதிப்பு 1,320 கோடி டாலர் உயர்ந்துள்ளது.

ஆர்.ஐ.எல். பங்கின் விலை 40 சதவீதம் உயர்ந்து இருப்பதே முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு எகிறியதற்கு முக்கியக் காரணமாகும். தொடர் ஏற்றம் காரணமாக ஆர்.ஐ.எல். பங்கு பற்றிய மதிப்பீடுகளையும் தரகு நிறுவனங்கள் உயர்த்த தொடங்கி உள்ளன. இந்த வகையில் சி.எல்.எஸ்.ஏ. நிறுவனம் அண்மையில் இப்பங்கிற் கான எதிர்கால இலக்கை ரூ.2,010-ஆக அதிகரித்தது. துணை நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ கட்டண விகிதங்களை உயர்த்தி இருப்பதே இதன் பின்னணியாகும்.

மும்பை பங்குச்சந்தையில், நேற்று வர்த்தகம் தொடங்கியபோது ஆர்.ஐ.எல். நிறுவனப் பங்கு ரூ.1,570.90-க்கு கைமாறியது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக ரூ.1,572.15-க்கும், குறைந்தபட்சமாக ரூ.1,542.75-க்கும் சென்றது. இறுதியில் ரூ.1,545.95-ல் நிலைகொண்டது. திங்கள்கிழமை இறுதி நிலவரத்துடன் ஒப்பிடும்போது இது 1.59 சதவீத சரிவாகும்.

ஒரு நிறுவனப் பங்கின் தற்போதைய விலையை, சந்தையில் புழங்கும் அந்த நிறுவனத்தின் மொத்த பங்குகளால் பெருக்க கிடைப்பதே அப்பங்குகளின் சந்தை மதிப்பு (மார்க்கெட் கேப்பிட்டலைசேஷன்) எனப்படுகிறது. பங்குகளின் சந்தை மதிப்பு அடிப்படையில் முன்னணி 10 இந்திய நிறுவனங்கள் பட்டியலில் முதலிடத்தில் ஆர்.ஐ.எல். உள்ளது. நேற்றைய நிலவரப்படி அதன் மதிப்பு சுமார் ரூ.9.80 லட்சம் கோடியாகும்.