Tamilசெய்திகள்

முககவசம் அணிவது கட்டாயம் – சட்டசபையில் அமைச்சர் மா.சுப்பிரமணியம் அறிவிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு தீவிரப்படுத்தி உள்ளது. பொது இடங்களில் முகக் கவசம் அணியாதவர்களுக்கு 500 ரூபாய்
அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து இன்று சட்டசபையில் விவாதிக்கப்பட்டது.

எதிர்க்கட்சி துணை தலைவர் ஒ.பன்னீர்செல்வம் பேசும்போது, முகக்கவசம் அணியாமல் இருந்த சட்டமன்ற உறுப்பினர்களை சுட்டிக்காட்டி பேசும் விதமாக, முகக்கவசம் கட்டாயம் என்பது
பொதுமக்களுக்கு மட்டும் தான் பொருந்துமா ? சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பொருந்தாதா? என கேள்வி எழுப்பினார்.

அப்போது குறுக்கிட்டு பேசிய சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு, சட்டமன்ற உறுப்பினர்கள் மாஸ்க் அணிந்துகொண்டு பேசினால் சத்தம் குறைவாக வருகிறது எனவும் பேசி முடித்த பிறகு மாஸ்க்
அணிந்துகொள்ளலாம் எனவும் கூறினார். மேலும், சட்டத்தை மதிக்கக்கூடாது என்பது நோக்கம் அல்ல என குறிப்பிட்ட சபாநாயகர், சட்டமன்ற உறுப்பினர்களின் இருக்கைகளில் மாஸ்க்
வைக்கப்பட்டுள்ள நிலையில் அதை பயன்படுத்திக்கொள்ளலாம் என தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் முகக்கவசம் அணிவது தொடர்பாக, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் இன்று சட்டபேரவையில் பதில் அளித்தார்.
அதன் விவரம் வருமாறு:-

நம்முடைய முதல்வர் அவர்கள், முகக் கவசம் கட்டாயம், கைகளை சுத்தம் செய்து கொள்வது கட்டாயம், தனி மனித இடைவெளி அவசியம் போன்ற கொரோனாவுக்கான விதிமுறைகளைக்
கடைபிடிக்க வேண்டும் என்று கடந்த 6, 7 மாதங்களுக்கு முன்பு பொதுமக்களுக்கு விதிமுறைகளை விதித்தார்.

அந்த நேரத்தில் தான், மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பில், யாரெல்லாம் பொது இடங்களில் முகக் கவசம் அணியவில்லையோ, அவர்களுக்கெல்லாம் 500 ரூபாய் அபராதம் என்று விதிக்கப்பட்டது.
தொடர்ச்சியாக அன்று முதல் இன்று வரை அதில் எந்தவிதமான மாற்றமும் செய்யப்படவில்லை. அந்த விதிமுறைகள் இதுவரையிலும் விலக்கிக்கொள்ளப்படவும் இல்லை.

இந்த நிலையில் தான் மூன்றாவது அலை முடிந்து, மீண்டும் தொற்றின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகின்ற சூழ்நிலையில், இந்த விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று
அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. அறிவுறுத்தப்பட்டிருப்பதன் விளைவாகத்தான், மன்ற உறுப்பினர்களுக்கும் இங்கே முகக் கவசங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. அந்த வகையில், முகக் கவசம் அணிந்து
கொள்வது என்பது அவரவர்களுடைய நலனுக்கு நல்லது. இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசினார்.