மீ டூ விவகாரத்தில் பெண்களை விமர்சித்த ராணி முகர்ஜிக்கு எதிர்ப்பு

இந்தி பட உலகின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவர் ராணி முகர்ஜி. தமிழில் கமல்ஹாசனுடன் ‘ஹேராம்’ படத்தில் நடித்துள்ளார். விழாவொன்றில் அவர் பேசும்போது, “ஹேராம் எனக்கு திருப்புமுனையாக அமைந்தது. முழு மேக்கப்புடன் சென்ற என்னை, முகத்தை கழுவி விட்டு வரச்சொல்லி நடிக்க வைத்து என்னாலும் நடிக்க முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தினார் கமல்ஹாசன்” என்றார்.

நடிகை தனுஸ்ரீ தத்தா பாலியல் புகாருக்கு பிறகு இந்தி பட உலகில் ‘மீ டூ’ இயக்கம் விவாதமாக மாறி இருக்கிறது. டெலிவிஷன்களிலும் மீ டூ கலந்துரையாடல்கள் நடத்துகிறார்கள். டி.வி. நிகழ்ச்சியொன்றில் நடிகைகள் தீபிகா படுகோனே, அனுஷ்கா சர்மா, அலியாபட் ஆகியோர் மீ டூவுக்கு ஆதரவாக கருத்து சொல்லி பாலியல் தொல்லை கொடுப்பவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும் என்றனர்.

ஆனால் ராணிமுகர்ஜி அந்த கருத்தை எதிர்த்தார். அவர் பேசும்போது, “ஆண்கள் மாற மாட்டார்கள். பெண்கள்தான் மாற வேண்டும். பெண்களே தங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும். இதற்காக அவர்கள் தற்காப்பு கலைகள் கற்றுக்கொள்வது அவசியம்” என்றார். ராணிமுகர்ஜியின் கருத்துக்கு எதிர்ப்புகள் கிளம்பி உள்ளன. அவரை கண்டித்து பேசி வருகிறார்கள். பாலியல் தொல்லை கொடுப்பவனுக்கும் தற்காப்பு கலை தெரிந்து இருந்தால் என்ன செய்வது என்று சமூக வலைத்தளத்தில் விமர்சிக்கின்றனர்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools