X

மீன்பிடி தடைகாலம் அமலுக்கு வந்தது – தூத்துக்குடியில் 10 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

கடல் வளம், மீன்வளத்தை பாதுகாக்கும் பொருட்டு ஆண்டுதோறும் ஏப்ரல் 15-ந்தேதி முதல் ஜூன் 14-ந் தேதி வரை 61 நாட்கள் மீன்பிடி தடைகாலம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த காலங்களில் மீன்கள் இனப்பெருக்கம் நடைபெறும்.

கிழக்கு கடற்கரை பகுதிகளான தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திரா, ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் இந்த ஆண்டுக்கான மீன்பிடி தடைகாலம் நேற்று நள்ளிரவு முதல் தொடங்கியது.

இந்த காலங்களில் விசைப்படகு மற்றும் இழுவை படகுகள் மூலம் ஆழ்கடலில் மீன்பிடிக்க தடை விதிக்கப்படுகிறது.

தூத்துக்குடி மாவட்டத்தில் தருவைகுளம், வேம்பார், தாளமுத்து நகர், வெள்ளப்பட்டி, திரேஸ்புரம், இனிகோநகர், தெர்மல்நகர், புன்னைக்காயல், மணப்பாடு, பெரியதாழை உள்பட மாவட்டம் முழுவதும் 555 விசைப்படகுகள் மூலம் சுமார் 10 ஆயிரம் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க சென்று வருகிறார்கள்.

மீன்பிடி தடை காரணமாக தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் 255 படகும், தருவைகுளத்தில் 220 படகும், வேம்பாரில் 80 படகும் கடற்கரையில் நிறுத்தப்பட்டுள்ளது.

இந்த தடைகாலம் இன்னும் 61 நாட்கள் தொடரும் என்பதால் மீன்கள் விலை உயரும் என தெரிகிறது. மீன்பிடி தடை கால நாட்களில் விசைப்படகு மீனவர்கள் தங்களது படகுகளை சீரமைப்பது, புதிய வலைகளை பின்னுவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள்.

நெல்லை மாவட்டத்தில் நாட்டுப்படகுகள் மூலமாக மட்டுமே மீனவர்கள் மீன்பிடித்து வருகிறார்கள். அந்த வகையில் கூடுதாழை, கூட்டப்பனை, உவரி, இடிந்தகரை, கூட்டப்புளி, பெருமணல், கூந்தங்குழி, பஞ்சல், தோமையார்புரம் உள்ளிட்ட 10 மீனவ கிராமங்களில் 2 ஆயிரம் நாட்டு படகுகளில் 5 ஆயிரம் மீனவர்கள் மீன்பிடித்து வருகிறார்கள்.

தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் ஆயிரம் நாட்டு படகுகளில் 10 ஆயிரம் மீனவர்கள் மீன்பிடித்து வருகிறார்கள். இவர்களுக்கு தடைகாலம் பொருந்தாது.