Tamilசெய்திகள்

மீன்கள் விலை குறைப்பு – வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட ராமேஸ்வரம் மீனவர்கள்

ராமேசுவரத்தில் 800-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் வாரத்தில் 3 நாட்கள் மீனவர்கள் கடலுக்கு சென்று வருகின்றனர். இதன் மூலம் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் வேலைவாய்ப்பை பெறுகின்றனர். ஒவ்வொரு முறையும் கடலுக்கு சென்று வரும்போது விலை உயர்ந்த இறால், நண்டு, கணவாய் உள்ளிட்ட பலவகை ரக மீன்கள் கிடைக்கும். டன் கணக்கில் பிடிக்கப்படும் மீன்களை ஏற்றுமதி நிறுவனங்கள் மொத்தமாக கொள்முதல் செய்து அதனை பதப்படுத்தி வெளிநாடுகளுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கிறது.

இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக ஏற்றுமதி நிறுவனங்கள் மீன்களுக்கு போதிய விலையை தர வில்லை என கூறப்படுகிறது. இதனால் மீனவர்கள் பாதிப்புக்குள்ளாகின்றனர். கடலுக்கு சென்று வந்த செலவுக்குகூட போதவில்லை. எனவே விலையை உயர்த்தி தரக்கோரி மீனவர்கள் ஏற்றுமதி நிறுவனங்களிடம் வலியுறுத்தினர். ஆனால் அதனை ஏற்க மறுத்ததாக தெரிகிறது.

இதனால் நஷ்டம் ஏற்படுவதாக கூறி ராமேசுவரம் மீனவர்கள் இன்று (2-ந் தேதி) வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவது என முடிவு செய்தனர். அதன்படி இன்று காலை ராமேசுவரத்தில் வேலை நிறுத்தம் தொடங்கியது. ராமேசுவரம் மற்றும் சுற்று வட்டார கடற்கரை பகுதிகளில் 800-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டிருந்தன. இதனால் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்களும், மீன்பிடி தொழிலை சார்ந்தவர்களின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகி உள்ளது. எப்போதும் பரபரப்பாக காணப்படும் ராமேசுவரம் துறைமுகம் வேலைநிறுத்தம் காரணமாக வெறிச்சோடி காணப்பட்டது.

கேரளாவில் தற்போது இறால், காரல், சூடை போன்ற மீன் வரத்துகள் அதிகரித்துள்ளது. ஏற்றுமதி நிறுவனங்கள் அங்கு குறைந்த அளவில் மீன்களை கொள்முதல் செய்கிறது. ராமேசுவரத்தில் மீன்களை வாங்க வியாபாரிகள் முன்வரவில்லை என கூறப்படுகிறது.

இதுகுறித்து ராமேசுவரம் மீனவர்கள் கூறுகையில், ஒவ்வொரு முறையும் மீனவர்கள் கடலுக்கு செல்லும்போது ரூ.30 ஆயிரம் வரை செலவாகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு கிலோ காரல் மீன் ரூ.40-க்கு வாங்கிய வியாபாரிகள் தற்போது அதனை ரூ.20-க்கு கேட்கின்றனர். சூடை மீனும் ரூ.20 ஆக குறைந்துள்ளது. சங்காயம் வகை மீன்கள் ரூ.23-க்கு விற்கப்பட்ட நிலையில் ரூ.17-க்கு கேட்கப்படுகிறது.

இதுபோன்று பல்வேறு ரக மீன்கள் குறைந்த விலைக்கு கேட்கப்படுவதால் மீனவர்களுக்கு நஷ்டம் ஏற்படுகிறது. கடலுக்கு சென்றும் போதிய வருமானம் இல்லை. இதனால் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளோம் என்றனர். விசைப்படகு மீனவர்கள் மட்டும் வேலைநிறுத்தத்தில் பங்கேற்றுள்ளனர். நாட்டு படகு மீனவர்கள் இன்று வழக்கம்போல் கடலுக்கு சென்று மீன் பிடித்தனர்.