Tamilசெய்திகள்

மீண்டும் 3 மாவட்டங்களில் பரிசோதனை மேற்கொள்ளும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2-வது அலை தீவிரமாக உள்ளது. அதனை தடுக்க தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 20-ந்தேதி கோவை, திருப்பூர், சேலம், மதுரை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது மாவட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள தொற்று நடவடிக்கைகள், எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசித்தார்.

மேலும் ஆக்சிஜன் படுக்கை வசதி உள்ளிட்ட மருத்துவ வசதிகள் உள்ளதா என்பதையும் அதிகாரிகளிடம் கேட்டறிந்து கொரோனா தடுப்பு பணியை தீவிரப்படுத்த மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவிட்டார்.

அரசு எடுத்த பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளால் சென்னை உள்பட சில மாவட்டங்களில் தற்போது கொரோனா தொற்று குறைய தொடங்கியுள்ளது.

இருப்பினும் சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களில் தொற்று பாதிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது. குறிப்பாக கோவை, சேலம், ஈரோடு, மதுரை, திருச்சி, திருப்பூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் தொற்று பாதிப்பு அதிகமாக உள்ளது. இந்த பகுதிகளில் தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் தடுப்பு பணிகளை மேற்கொள்ள அமைச்சர்கள், ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்து தினமும் அரசுக்கு தெரிவித்து வருகின்றனர். இதுதவிர முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் 6 மாவட்ட கலெக்டர்களுடன் தொற்று கட்டுப்படுத்துவது குறித்து நேற்று முன்தினம் ஆலோசனை மேற்கொண்டார்.

கோவை மாவட்டத்தில் கடந்த 3 தினங்களாகவே தொற்று பாதிப்பு அதிகரித்த படியே உள்ளது. தொடர்ந்து 3 நாட்களாக மாநில அளவில் தொற்று பாதிப்பில் சென்னையை பின்னுக்கு தள்ளி முதலிடத்தில் கோவை உள்ளது. இதையடுத்து அங்கு கொரோனா தடுப்பு பணியை தீவிரப்படுத்துமாறு மாவட்ட கலெக்டருக்கு முதல்- அமைச்சர் உத்தரவிட்டார்.

இந்த நிலையில் தொற்று அதிகரித்து வரும் கோவை மாவட்டத்தில் மு.க.ஸ்டாலின் நாளை ஆய்வு மேற்கொள்கிறார். இதற்காக அவர் இன்று மாலை 6.30 மணியளவில் சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவைக்கு செல்கிறார். பின்னர் அங்கிருந்து கார் மூலம் ஈரோட்டிற்கு செல்லும் முதல்- அமைச்சர் இரவில் அங்கு தங்கி ஓய்வெடுக்கிறார்.

தொடர்ந்து நாளை காலை 10 மணியளவில் பெருந்துறையில் உள்ள ஐ.ஆர்.டி மருத்துவ கல்லூரியில் ஆய்வு மேற்கொள்கிறார். பின்னர் திருப்பூர் மாவட்டத்திற்கு வரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திருப்பூரில் உள்ள குமரன் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்வதோடு, அங்கு நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகளை கேட்டறிகிறார்.

2 மாவட்டங்களில் ஆய்வை முடித்து கொண்டு மதியம் 12.30 மணியளவில் மு.க.ஸ்டாலின் கோவை மாவட்டத்திற்கு வருகிறார். முதலில் கோவை சிங்காநல்லூர் பகுதியில் உள்ள இ.எஸ்.ஐ. மருத்துவ கல்லூரிக்கு சென்று ஆய்வு செய்கிறார். அப்போது அங்குள்ள மருத்துவ வசதிகள், ஆக்சிஜன் படுக்கை வசதிகள், நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிகிறார்.

அதனை தொடர்ந்து மாலை 4.40 மணிக்கு கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வரும் மு.க.ஸ்டாலின் அங்கு கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட 4 மாவட்ட கலெக்டர்கள், 4 மாவட்ட சுகாதார துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.

இந்த கூட்டத்தில் மாவட்டங்களில் கொரோனா தடுப்பு பணியை தீவிரப்படுத்துவது, கூடுதல் படுக்கை வசதிகளை ஏற்படுத்துவது, ஆக்சிஜன் கையிருப்பை உறுதி செய்வது தொடர்பாக அதிகாரிகளுக்கு உத்தரவிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து மாலை 6.30 மணியளவில் செய்தியாளர்களை மு.க.ஸ்டாலின் சந்திக்க உள்ளார்.

முதல்- அமைச்சர் வருகையை முன்னிட்டு மாவட்டத்தில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே கோவை மாவட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டிருந்தார். தற்போது 2-வது முறையாக கோவைக்கு வருவது குறிப்பிடத்தக்கது.