காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து உபரி நீர் காவிரி ஆற்றில் திறந்துவிடப்பட்டு வருகிறது. இதனால் மேட்டூர் அணைக்கு தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
நேற்று 16 ஆயிரத்து 250 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று 16 ஆயிரத்து 224 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து காவிரியில் டெல்டா பாசனத்திற்காக 2 ஆயிரம் கன அடி தண்ணீரும் கால்வாயில் 350 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டுள்ளது. அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து மிக குறைந்த அளவே தண்ணீர் திறந்துவிடப்படுவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.
நேற்று 117.04 அடியாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை மேலும் உயர்ந்து 117.80 அடியாக இருந்தது. பிற்பகலில் 118 அடியை தாண்டியது.
ஏற்கனவே மேட்டூர் அணை இந்த ஆண்டு 2 முறை நிரம்பிய நிலையில் இதே அளவு நீர்வரத்து இருந்தால் இன்னும் 3 நாட்களில் மேட்டூர் அணை 3-வது முறையாக நிரம்ப வாய்ப்பு உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.