மீண்டும் ஹாலிவுட் படத்தில் நடிக்கும் தனுஷ்
நடிகர், தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர், இயக்குனர் என பன்முகத்திறமை கொண்டவர் தனுஷ். தமிழில் முன்னணி நடிகராக வலம்வரும் இவர், கடந்த 2013-ம் ஆண்டு வெளியான ‘ராஞ்சனா’ படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். இதையடுத்து அமிதாப் பச்சனுடன் ஷமிதாப் படத்தில் நடித்தார்.
பின்னர் மீண்டும் தமிழ் படங்களில் கவனம் செலுத்தி வந்த தனுஷ், கடந்த 2018-ம் ஆண்டு ‘தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆஃப் ஃபகீர்’ என்ற படம் மூலம் ஹாலிவுட்டில் அறிமுகமானார். இப்படம் மூலம் அவர் உலகளவில் பிரபலமானார்.
இந்நிலையில், நடிகர் தனுஷ் மீண்டும் ஒரு ஹாலிவுட் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். அதன்படி அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார் மற்றும் எண்ட் கேம் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய இயக்குனர்கள் அந்தோனி மற்றும் ஜோ ரூசோ தற்போது ‘தி கிரே மேன்’ என்கிற நாவலை அடிப்படையாகக் கொண்டு, அதே பெயரில் ஒரு திரைப்படத்தை இயக்குகின்றனர்.
இந்த படத்தில் கிறிஸ் ஈவான்ஸ், ரயன் காஸ்லிங் போன்ற ஹாலிவுட் நடிகர்கள் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். நடிகர் தனுஷும் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக, இப்படத்தை தயாரிக்கும் நெட்பிளிக்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.