X

மீண்டும் வில்லனாகும் பாரதிராஜா!

இயக்குனர் பாரதிராஜா தொடர்ந்து படங்களில் நடிக்க தொடங்கி உள்ளார். பாண்டியநாடு, குரங்கு பொம்மை, நம்ம வீட்டு பிள்ளை ஆகிய படங்களில் அவரது நடிப்புக்கு பாராட்டுகள் கிடைத்தன. தற்போது ‘ராக்கி’ படத்தில் வில்லனாக நடிக்கிறார். இதில் கதாநாயகனாக வசந்த் ரவி வருகிறார். இவர் ஏற்கனவே தரமணி படத்தில் நடித்துள்ளார்.

ராக்கி படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கி உள்ளார். படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் பாரதிராஜா குரூரமான தாதாவாக வருகிறார். படம் குறித்து வசந்த் ரவி கூறியதாவது:- “ராக்கி படத்தில் வில்லன் வேடத்துக்கு பாரதிராஜா பொருத்தமாக இருப்பார் என்று அவரை அணுகினோம். முதலில் மறுத்தவர் கதையை கேட்டதும் சம்மதித்தார். நடித்து முடித்துவிட்டு படத்தை பார்த்து சிறப்பாக வந்து இருப்பதாக பாராட்டினார். இனிமேல் வில்லன் வேடங்களில் நடிக்க மாட்டேன் என்றும் தெரிவித்தார்.

பாரதிராஜா கதாபாத்திரம் படத்துக்கு பெரிய பலமாக இருக்கும். நான் எம்.பி.பி.எஸ் முடித்து லண்டனில் மருத்துவ நிர்வாக மேற்படிப்பு படித்து விட்டு சினிமா ஆசையால் நடிக்க வந்துள்ளேன். தரமணி படத்தில் நடித்த பிறகு 40 கதைகள் கேட்டு ராக்கி கதையை தேர்வு செய்து நடித்துள்ளேன். இது தாதாக்களுக்குள் நடக்கும் பழிவாங்கும் கதை. நான் ரவுடியாக வருகிறேன். அடுத்து கமர்ஷியல் படங்களில் நடிக்க ஆசை உள்ளது.” இவ்வாறு வசந்த் ரவி கூறினார்.