Tamilசினிமா

மீண்டும் விஜய்க்கு தம்பியாக நடிக்கும் ஜெய்?

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘லியோ’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன் என திரைப்பிரபலங்கள் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இப்படத்தை தொடர்ந்து விஜய்யின் 68-வது படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்க கல்பாத்தி எஸ். அகோரமின் ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். தற்காலிகமாக ‘தளபதி 68’ என்று பெயரிடப்பட்டுள்ள இப்படம் 2024 -ஆம் ஆண்டு வெளியாகவுள்ளது.

‘தளபதி 68’ படத்தின் நடிகர், நடிகைக்கான தேர்வு நடைபெற்று வரும் நிலையில், இப்படத்தில் நடிகர் ஜெய்-ஐ நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்துவருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இப்படத்தில் ஜெய், விஜய்க்கு தம்பியாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘பகவதி’ படத்தை தொடர்ந்து, 21 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் உடன் நடிகர் ஜெய் இணையவுள்ளதாக வெளியாகும் தகவலால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான சென்னை 28, சரோஜா, கோவா, பிரியாணி, மாசு என்கிற மாசிலாமணி, சென்னை 28 -2 உள்ளிட்ட படங்களில் ஜெய் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.