Tamilசெய்திகள்

மீண்டும் மாவட்ட செயலாளர்களை சந்திக்கிறார் ரஜினிகாந்த்!

நடிகர் ரஜினிகாந்த் கடந்த வாரம் தனது மக்கள் மன்றத்தின் மாவட்ட செயலாளர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

சட்டமன்ற தேர்தலில் போட்டி என்று ரஜினி அறிவித்து 2 ஆண்டுகள் கடந்த நிலையில் தேர்தலுக்கு இன்னும் ஒரு ஆண்டே இருப்பதால் இந்த சந்திப்பு முக்கியமானதாக பார்க்கப்பட்டது. சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் இந்த கூட்டம் நடந்தது. கட்சி தொடங்குவது தொடர்பாக ரஜினிகாந்த் தீவிரமாக ஆலோசனைகளை மேற்கொண்டார்.

மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு பின் ரஜினிகாந்த் அளித்த பேட்டி பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.

ஒரு வி‌ஷயத்தில் மட்டும் எனக்கு திருப்தியில்லை. தனிப்பட்ட ஒரு வி‌ஷயத்தில் ஏமாற்றம், அதை நேரம் வரும்போது தெரிவிப்பேன், என்று குறிப்பிட்டார்.

நிர்வாகிகளிடம் பேசிய ரஜினி சட்டசபை தேர்தலில் நாம் கண்டிப்பாக போட்டியிடுவோம். ஆனால் கண்டிப்பாக நான் முதல்வராக மாட்டேன். எனக்கு அந்த விருப்பம் இல்லை என்று கூறியதாகவும், ஆனால் நிர்வாகிகள் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்ததாகவும் செய்தி பரவியது. ரஜினியின் இந்த திடீர் முடிவு அவரது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் நாளை மீண்டும் தனது மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ள மொத்தம் 38 ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கட்சி குறித்தும் சட்டசபை தேர்தல் குறித்தும் முக்கியமான வி‌ஷயங்களை பேச வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

கடந்த முறை தனக்கு சின்ன ஏமாற்றம் என்று நடிகர் ரஜினிகாந்த் குறிப்பிட்டு இருந்தார். அந்த சின்ன ஏமாற்றம் எதுவென்று நாளை ரஜினிகாந்த் குறிப்பிடுவார் என்று கூறுகிறார்கள். நாளை ஆலோசனை கூட்டத்துக்கு பின் ரஜினிகாந்த் பத்திரிகையாளர்களையும் சந்திக்க திட்டமிட்டுள்ளார்.

சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு ஆண்டே இருப்பதால் ரஜினி கட்சி தொடங்கும் நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளார். கட்சி பதிவு தொடர்பான பணிகள் ஏற்கனவே தொடங்கிவிட்டதாகவும் இதற்காக ரஜினிக்கு நெருக்கமான வக்கீல்கள் டெல்லியில் முகாமிட்டுள்ளதாகவும் கடந்த வாரமே தகவல் வெளியானது.

வரும் ஏப்ரல் 14-ந்தேதி ரஜினி தனது கட்சி பெயரை அறிவிப்பார் என்றும் நம்பிக்கை தெரிவித்திருந்தனர். இந்த செய்திகளை உண்மையாக்கும் வகையில் ரஜினியின் அடுத்தடுத்த நடவடிக்கைகள் அமைந்துள்ளன.

கடந்த வாரம் மாவட்ட செயலாளர்களை சந்தித்த பின்னர் இந்திய குடியரசு கட்சி தலைவர் செ.கு. தமிழரசன், காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர் ஆகியோரை நேரில் சந்தித்து ரஜினி ஆலோசனை நடத்தினார்.

நாளை நடைபெறும் மாவட்ட செயலாளர்கள் சந்திப்பில் சில ஆலோசனைகள் செய்தபிறகு பத்திரிகையாளர்களை சந்திக்கும் ரஜினி தனது அரசியல் வருகையை உறுதி செய்வதுடன் கட்சி அறிவிப்பு தேதியையும் வெளியிடுவார் என்கிறார்கள்.

ரஜினி கடந்த வாரம் குறிப்பிட்ட அந்த ஏமாற்றம், அதிருப்தி என்ன? அந்த அதிருப்தி களையப்பட்டதா என்பதும் நாளை தெரியவரும். ரஜினி கட்சி அறிவிப்பையே மாநாடாக நடத்தி வெளியிட வேண்டும் என்பது அவர் மன்ற நிர்வாகிகளின் கோரிக்கையாக எழுந்துள்ளது. இதை உணர்ந்த ரஜினி மதுரையில் மாநாடு நடத்த திட்டமிட்டு இருக்கிறார் என்று சொல்கிறார்கள்.

2 ஆண்டுகளுக்கு முன்பு அரசியல் அறிவிப்பை வெளியிடும்போது 234 தொகுதிகளிலும் தனித்து போட்டி என்று அறிவித்த ரஜினி தற்போது கூட்டணிக்கும் தயாராகி விட்டார். எனவே தனது செல்வாக்கை காட்ட மாநாடு நடத்துவது ஒன்றே சரியான வழியாக இருக்கும் என்று நினைக்கிறார்.

மாநாடு மூலம் தனது செல்வாக்கை காட்டினால் தான் கூட்டணி அமையும் போது அது தனது தலைமையில் அமையும் என்பது ரஜினியின் கணக்கு. ரஜினியுடன் கூட்டணி என்றால் அதில் சேர்வதற்கு கமல், காங்கிரஸ், பா.ஜனதா கட்சிகள் முன்வரலாம். இந்த கட்சிகளில் ரஜினி தனது தலைமையை ஏற்கும் கட்சிகளை சேர்த்துக் கொள்வார்.

மேலும் தி.மு.க., அதிமுக கூட்டணிகளில் உள்ள அதிருப்தி கட்சிகள் ரஜினியுடன் இணைந்து வலுவான கூட்டணியாக மாறும் என்றும் ரஜினி மன்ற நிர்வாகிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *