மீண்டும் போர் விமானங்களை கொண்டு பயிற்சியில் ஈடுபட்ட சீனா – பதற்றத்தில் தைவான்

கிழக்கு ஆசியாவில் உள்ள நாடு, தைவான். தைவானை தங்களது நாட்டின் ஒரு பகுதி என்று சீனா, நீண்டகாலமாக சொந்தம் கொண்டாடி வருகிறது. இதனை ஏற்க மறுத்து தைவான் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

இவ்விவகாரத்தில் தைவானுக்கு ஆதரவாக அமெரிக்கா உள்ளதால் சீனா கடுங்கோபத்தில் உள்ளது. சில மாதங்களுக்கு முன்பு தைவானை சுற்றியுள்ள கடற்பகுதியில் சீனா அத்துமீறி போர் பயிற்சிகளை மேற்கொண்டதால் பதற்றம் ஏற்பட்டது.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமையிலிருந்து திங்கட்கிழமை வரையில் 103 போர் விமானங்களை கொண்டு போர் பயிற்சியை தைவானின் வான் பகுதியில் சீனா மேற்கொண்டது. நேற்றிலிருந்து இன்று வரை சீனா மேலும் 55 போர் விமானங்களின் பயிற்சியை மேற்கொண்டதுடன் தைவானை சுற்றியுள்ள கடற்பகுதியில் 7 போர்கப்பல்களை கொண்டு பயிற்சி ஓட்டத்தில் ஈடுபட்டது.

அந்த 55 போர் விமானங்களில், பாதி விமானங்களுக்கு மேற்பட்டவை, சீனாவையும் தைவானையும் பிரிக்கும் தைவான் ஜலசந்தி பகுதியின் மத்திய எல்லை கோட்டை தாண்டி, தைவானின் தென்கிழக்கு மற்றும் தென்மேற்கு வான் பாதுகாப்பு அடையாள எல்லை வரை நுழைந்ததாக தைவான் அறிவித்திருக்கிறது.

இதனையடுத்து, போர் பதட்டத்தை தூண்டி வருவதாக சீனா மீது தைவான் மீண்டும் குற்றம்சாட்டியுள்ளது. போர் விமானங்களின் பயிற்சி குறித்து கருத்து தெரிவிக்காத சீன வெளியுறவுத்துறை, “தைவான், சீனாவிற்கு சொந்தமானது” என மீண்டும் வலியுறுத்தியுள்ளது. மேலும், தைவான் குறிப்பிடும் மத்திய எல்லைக்கோட்டு பகுதி என எதுவும் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளது.

சமீபத்தில் தைவான் ஜலசந்தி பகுதியில் கனடா மற்றும் அமெரிக்காவிற்கு சொந்தமான 2 கப்பல்கள் பயணம் மேற்கொண்டதையடுத்து தனது துருப்புகளுக்கு சீனா எச்சரிக்கை விடுத்தது குறிப்பிடத்தக்கது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: tamil news