Tamilசெய்திகள்

மீண்டும் பா.ஜ.க கூட்டணிக்கு செல்வதை விட உயிரை மாய்த்துக்கொள்வேன் – நிதிஷ்குமார்

பீகார் மாநில முதல்-மந்திரியும், ஐக்கிய ஜனதாதள தலைவருமான நிதிஷ்குமார், கடந்த 2013-ம் ஆண்டு பா.ஜனதா கூட்டணியில் இருந்து விலகினார். லாலுபிரசாத் யாதவ் தலைமையிலான ராஷ்டிரீய ஜனதாதளத்துடன் கூட்டணி சேர்ந்தார். பின்னர், 2017-ம் ஆண்டு அந்த கூட்டணியில் இருந்து விலகி, பா.ஜனதாவுடன் மீண்டும் கூட்டணி அமைத்தார். கடந்த ஆண்டு பா.ஜனதா கூட்டணியை விட்டு விலகி, ராஷ்டிரீய ஜனதாதளத்துடன் கைகோர்த்தார்.

இந்தநிலையில், ராஷ்டிரீய ஜனதாதளத்துடன் நிதிஷ்குமாருக்கு மோதல் ஏற்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது. அதனால், அவர் மீண்டும் பா.ஜனதாவுடன் கைகோர்ப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து கேட்டதற்கு நிதிஷ்குமார் கூறியதாவது:-

பா.ஜனதாவுடன் மீண்டும் கைகோர்ப்பதை விட நான் உயிரை மாய்த்துக்கொள்வேன். கடந்த 2017-ம் ஆண்டு, லாலுபிரசாத் யாதவ், அவருடைய மகன் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் மீதான ஆதாரமற்ற ஊழல் குற்றச்சாட்டுகள் அடிப்படையில் நான் பா.ஜனதா கூட்டணிக்கு சென்றது மிகவும் தவறு. அந்த கூட்டணியில் இருந்தபோது, எனது ஆதரவாளர்கள் அனைவரது ஓட்டுகளையும் பா.ஜனதா பெற்று வந்தது.

பா.ஜனதாவின் இந்துத்துவா கொள்கையால் அதிருப்தியில் உள்ள முஸ்லிம்களின் ஓட்டுகளும் அதில் அடங்கும். வருகிற பாராளுமன்ற தேர்தலில் பீகாரில் உள்ள 40 தொகுதிகளில் 36 தொகுதிகளை கைப்பற்றப்போவதாக பா.ஜனதா கூறுவது கேலிக்கூத்தானது.

இவ்வாறு அவர் கூறினார்.