பாலிவுட் நடிகையான கங்கனா ரணாவத் சமீப காலமாக பயோபிக் படங்களில் நடிப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். இவர் நடிப்பில் வெளியான `தலைவி’, `மணிகர்ணிகா’ போன்ற படங்கள் பெரும் வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து இவர் இந்திரா காந்தியின் கதாபாத்திரத்தைத் தழுவிய `எமர்ஜென்சி’ எனும் படத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில் தற்போது பெங்காலி நாடகங்களில் நடித்து புகழ்பெற்ற நாடக நடிகையான பினோதினியின் வாழ்க்கை கதையில் கங்கனா ரணாவத் நடிக்கவுள்ளார். இந்த படத்தை பரிணிதா, மர்தாணி போன்ற படங்களை இயக்கிய பிரதீப் சர்க்கார் இயக்கவுள்ளார்.
இந்த படம் தொடர்பாக நடிகை கங்கனா ரணாவத் கூறியதாவது, “நாடு போற்றும் பெருமை பெற்ற பினோதினி பயோபிக்கில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததை பெருமையாக நினைக்கிறேன். மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. இயக்குனர் பிரதீப் சர்க்கார் படங்களுக்கு நான் மிகப்பெரிய ரசிகை. அவருடன் சேர்ந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சியாக உள்ளது” என்று கூறியுள்ளார்.