அஜித்துடன் உன்னைத்தேடி படத்தில் நடித்து தமிழில் அறிமுகமானவர் மாளவிகா. வாளமீனுக்கும் விலாங்குமீனுக்கும் கல்யாணம்… பாடலில் நடனம் ஆடி பிரபலமானார். ரோஜா வனம், வெற்றி கொடி கட்டு, சந்திரமுகி, திருட்டு பயலே, குருவி, வியாபாரி, சபரி உள்பட பல முக்கிய படங்களில் நடித்துள்ளார்.
10 வருடங்களுக்கு முன்பு சுமேஷ் என்பவரை திருமணம் செய்து சினிமாவை விட்டு விலகினார். மாளவிகாவுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். குடும்பத்துடன் மும்பையில் வசித்து வந்தார். நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் தமிழ் படங்களில் நடிக்க தயாராகி உள்ளார். 2 கதைகள் கேட்டுள்ளார். இவற்றில் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
மீண்டும் நடிப்பது குறித்து மாளவிகா கூறுகையில், “தமிழில் நல்ல கதைகள் மற்றும் கதாபாத்திரங்களில் நடித்தேன். முன்னணி நடிகர்களுடனும் ஜோடி சேர்ந்தேன். ரசிகர்களும் என்மீது அன்பு காட்டினார்கள். வாளமீன் பாடல் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. திருமணத்துக்கு பிறகு குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்தினேன்.
மீண்டும் நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது. இப்போது அதற்கான நேரம் வந்துள்ளது. புதிய படங்களில் நடிக்க கதை கேட்டு வருகிறேன். நல்ல கதாபாத்திரங்களில் நடிக்க முடிவு செய்துள்ளேன்.” என்றார்.