X

மீண்டும் தொடங்கியது ‘விடாமுயற்சி’ படப்பிடிப்பு – அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்

மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி என்ற திரைப்படத்தில் அஜித்குமார் நடித்து வருகிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார். அஜித்தின் 62 – வது ஆக்ஷன் படமாக இது உருவாகி வருகிறது.

இப்படத்தில் வில்லனாக ஆக்ஷன் கிங் நடிகர் அர்ஜுன் மற்றும் ஆரவ் நடிகைகள் ரெஜினா கசாண்ட்ரா, பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இப்படத்தை ‘லைகா’ நிறுவனம் சார்பில் சுபாஸ்கரன் தயாரிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார்.

இதன் படப்பிடிப்புகள் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அஜர்பைஜானில் தொடங்கியது. அதன் பின் வடமாநிலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இதன் படப்பிடிப்பு நடந்து வந்தது. இந்த படத்தில் அஜித்குமார் ‘டூப்’ இல்லாமல் துணிச்சலாக நடித்து இருக்கும் வீடியோ வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. அதைத் தொடர்ந்து இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகி இருந்தது.

இந்நிலையில் இப்படத்தின் 70% படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் திடீரென படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இதனையடுத்து ஆதி ரவிசந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்தில் அஜித் நடிக்கிறார் என்ற தகவல் வெளியானது. அதனால் விடாமுயற்சி படம் கைவிடப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் வதந்திகள் தீ போல பரவின. அண்மையில், விடாமுயற்சி படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு இம்மாத இறுதியில் துவங்கவுள்ளது என்று நடிகர் அர்ஜுன் அப்டேட் கொடுத்தார்,

இந்நிலையில், நடிகர் அஜித் குமாரின் ‘விடாமுயற்சி’ படப்பிடிப்பு அஜர்பைஜானில் மீண்டும் தொடங்கியது. படத்தின் சண்டை காட்சிகள் படமாக்கப்படும் வீடியோவை பகிர்ந்து அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா அப்டேட் கொடுத்துள்ளார். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 1-ந் தேதி விடாமுயற்சி படத்தை ‘ரிலீஸ்’ செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.