X

மீண்டும் தொடங்கப்பட்ட சென்னை மெட்ரோ ரெயில் சேவை – ஒரே நாளில் 29 ஆயிரம் பேர் பயணம்

மெட்ரோ ரெயில் சேவை ஒரு மாதத்திற்கு பின்பு நேற்று முன்தினம் மீண்டும் தொடங்கியது. காலை மற்றும் மாலை நேரங்களில் மட்டும் 5 நிமிடத்திற்கு ஒரு சேவையும் மற்ற நேரங்களில் 10 நிமிடத்திற்கு ஒரு சேவையும் அளிக்கப்படுகிறது.

கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை பின்பற்றி 50 சதவீத பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள். ரெயில் நிலையங்களில் குளிர்சாதன வசதி தடை செய்யப்பட்டுள்ளது. 2 வழித்தடத்திலும் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படுகிறது.

குறைந்த அளவிலேயே மக்கள் பயணம் செய்து வருகிறார்கள். அரசு அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்களில் பணியாற்றக்கூடிய ஊழியர்கள் அதிக அளவு பயணம் செய்தனர்.

முதல் நாளில் 29 ஆயிரம் பேர் பயணித்தனர். நேற்று இந்த எண்ணிக்கை 34 ஆயிரமாக உயர்ந்துள்ளது. கோயம்பேடு பஸ் நிலையம், சென்ட்ரல், விமான நிலையங்களில் அதிக பயணிகள் பயணம் செய்தனர்.

அதேபோல ஆலந்தூர், திருமங்கலம், விம்கோ நகர் நிலையங்களிலும் பொதுமக்களை காண முடிந்தது. இன்று 3-வது நாளாக சேவை நீடிக்கிறது. படிப்படியாக பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மெட்ரோ ரெயிலில் முகக்கவசம் அணியாமல் பயணம் செய்தால் ரூ.200 அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை கண்காணிக்க குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.