X

மீண்டும் தமிழ்ப் படத்தில் நடிக்கும் சர்வானந்த்

‘ஜோக்கர்’, ‘காஷ்மோரா’, ‘அருவி’, ‘தீரன் அதிகாரம் ஒன்று’, ‘NGK’, ‘ராட்சசி’ போன்ற பல வெற்றிப்படங்களை தயாரித்த நிறுவனம் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ். தற்போது கார்த்தி நடித்திருக்கும் ‘கைதி’ படத்தைத் தயாரித்து வருகிறது. ‘மாநகரம்’ லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இப்படம், இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு வெளிவருகிறது.

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் அடுத்ததாக புதிய படம் ஒன்றை தயாரிக்கிறது. ‘எங்கேயும் எப்போதும்‘ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி தற்போது தெலுங்கில் முன்னணி நாயகர்களில் ஒருவராக திகழும் சர்வானந்த் இப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக, ‘துருவ நட்சத்திரம்’ படத்தின் நாயகி ரீத்து வர்மா நடிக்கிறார். இவர்களுடன் நாசர், சதீஷ், ரமேஷ் திலக் மற்றும் பலர் நடிக்கிறார்கள். இப்படத்தின் மூலம் ஸ்ரீகார்த்திக் இயக்குநராக அறிமுகமாகிறார்.

வாழ்க்கையில் பிரிக்கமுடியாத விஷயங்களான நட்பு, காதல், தாய்பாசம், இவற்றை பின்னணியாக கொண்டு ஜனரஞ்சகமாக அமைக்கப்படுள்ளது இதன் கதை. இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் பூஜையுடன் துவங்கி உள்ளது. 2020ம் ஆண்டு கோடை விடுமுறையில் வெளியிட திட்டமிட்டுள்ளார்கள்.