X

மீண்டும் டெஸ்ட் அணியில் இடம் பிடிப்பேன் – ஷிகர் தவான் நம்பிக்கை

இந்திய கிரிக்கெட் அணியின் இடது கை பேட்ஸ்மேன் ஷிகர் தவான். சேவாக் அணியில் இருந்து விலகிய பின்னர் தொடர்ந்து தொடக்க பேட்ஸ்மேனாக களம் இறங்கி விளையாடி வருகிறார். 34 வயதாகும் தவான், இங்கிலாந்துக்கு எதிராக ஓவல் மைதானத்தில் நடைபெற்ற போட்டிக்குப்பின் டெஸ்ட் போட்டியில் களம் இறங்கவில்லை. ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் சிறப்பாக விளையாடினாலும், டெஸ்ட் போட்டியில் தொடர்ந்து விளையாடவில்லை.

தற்போது ரோகித் சர்மா தொடக்க வீரராக களம் இறங்கி வருகிறார். இளம் வீரர்கள் மயங்க் அகர்வால், பிரித்வி ஷா, ஷுப்மான கில் போன்றோர் உள்ளனர். முரளி விஜயும் உள்ளார். இதனால் ஷிகர் தவானின் டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்ததாக கருதப்படுகிறது.

இந்நிலையில் மீண்டும் அணிக்கு திரும்புவேன் என்ற நம்பிக்கையை விடவில்லை என்று ஷிகர் தவான் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஷிகர் தவான் கூறுகையில் ‘‘நான் இந்திய டெஸ்ட் அணியில் இல்லை. அதற்காக நான் மீண்டும் அணிக்கு திரும்புவேன் என்ற நம்பிக்கை விட்டுவிட்டேன் என்று அர்த்தமில்லை.

வாய்ப்பு கிடைத்த போதெல்லாம், ரஞ்சி டிராபியில் கடந்த ஆண்டு செஞ்சூரி அடித்துள்ளேன். அப்புறம் ஒருநாள் அணியில் இடம் பிடித்தேன். வாய்ப்பு கிடைத்தால், ஏன் இல்லை என்று சொல்ல முடியும்.

என்னுடைய சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். அடுத்த வருடம் டி20 உலக கோப்பை தொடர் நடைபெற இருக்கிறது. அதற்காக சிறப்பாக விளையாடுவது, உடற்தகுதியை கட்டுக்கோப்பாக வைத்திருந்தல், தொடர்ச்சியான ரன்கள் குவிப்பது அவசியம். இதை சரியாக செய்தால், தானாகவே அணியில் இடம்பிடிக்க முடியும்’’ என்றார்.