மீண்டும் டெல்லியில் காற்று மாசுபடுவது அதிகரிப்பு
டெல்லியில் ஒவ்வொரு குளிர்காலத்தின்போதும் காற்றின் தரம் மிகவும் பாதிக்கப்படும். இந்த ஆண்டு குளிர்காலத்தின் தொடக்கத்திலேயே காற்று மிகவும் மாசுபட்டு உள்ளது. காற்றின் தரம் மோசமாக இருந்து வருகிறது.
காற்று மாசுபாட்டை குறைக்க அரசு விழிப்புணர்வு மூலமாகவும் பல்வேறு கட்டங்களாக நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றன. டெல்லியின் அண்டை மாநிலங்களில் நிகழும் பயிர்க்கழிவுகள் எரிப்பு போன்றவையும் காற்று மாசுபாட்டுக்கு காரணமாக அமைகிறது. டெல்லியில் காற்று மாசு ஏற்படுத்தினால் ஒரு கோடி ரூபாய் வரை அபராதம் மற்றும் 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிப்பதற்கான அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனினும் காற்று மாசு அதே நிலையில் உள்ளது.
டெல்லியில் தொடர்ந்து அதிக அளவு காற்று மாசு இருப்பது கவலையைத் உண்டாக்குகிறது. இன்று காலையில் காற்று தரக் குறியீடு (AQI) தொடர்ந்து ‘மிகவும் மோசமான’ பிரிவில் உள்ளது. டெல்லி ஆனந்த் விகார் பகுதியில் 484 புள்ளிகளாகவும், ஐடிஓ பகுதியில் 472 புள்ளிகளாகவும் மிகவும் மோசமான நிலையில் உள்ளது.
கடுமையான காற்று மாசுபாடு காரணமாக எங்கு பார்த்தாலும் புகைப் படலம் போர்த்தியது போல் காட்சியளிக்கிறது. இதனால், மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். காலையில் வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு புகை படர்ந்திருந்தது. வாகன ஓட்டிகள் மிகவும் மெதுவாக வாகனங்களை இயக்கினர். கொரோனா தொற்று பரவல் உச்சத்தில் உள்ள சூழலில் காற்று மாசும் டெல்லி மக்களை வதைத்து வருவது குறிப்பிடத்தக்கது.