Tamilசினிமா

மீண்டும் கமல்ஹாசனுக்கு ஜோடியாக நடிக்கும் மனிஷா கொய்ராலா

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடித்த ‘இந்தியன்’ திரைப்படம் 28 ஆண்டுகளுக்கு முன் வெளியாகி வெற்றி பெற்றது. மேலும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்று வசூல் சாதனையும் படைத்தது.

இந்நிலையில் இந்தியன்- 2 படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்தது. இதைதொடர்ந்து இயக்குனர் ஷங்கர் ‘இந்தியன் – 2’ படத்தில் கமலை மீண்டும் கதாநாயகனாக இயக்க தொடங்கினார். இப்படத்தை லைக்கா மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரித்தன. இதில் காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, டெல்லி கணேஷ், ஜெயபிரகாஷ், குரு சோமசுந்தரம், வெண்ணிலா கிஷோர், ஜார்ஜ் மரியான், உள்ளிட்ட பலர் நடித்தனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதி கட்டப்பணிகள் நடந்து வருகின்றன.

இந்நிலையில் இந்தியன் படத்தில் கமலுடன் நடித்த மனீஷா கொய்ராலாவை மீண்டும் இந்தியன் – 2 படத்தில் நடிக்க வைக்க ஏற்பாடு நடந்து வருகிறது. இதில் சில காட்சிகளில் மனீஷா நடிக்க உள்ளார். இயக்குனர் ஷங்கர் சமீபத்தில் மும்பை சென்ற போது மனீஷாவை நேரில் சந்தித்து இது தொடர்பான பேச்சுவார்த்தை நடத்தினார்.

எனவே விரைவில் கமல், மனீஷா கொய்ராலா சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கபட உள்ளன. அந்த காட்சிகளை படத்தில் இணைத்து ஜூன் மாதம் இந்தியன் 2 படத்தை ‘ரிலீஸ்’ செய்ய படக்குழு திட்டமிட்டு உள்ளது.