மீண்டும் எம்.பி-யான ராகுல் காந்தி – அரசு பங்களாவில் குடியேற முடிவு

மோடி குறித்த அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து சூரத் கோர்ட்டு தீர்ப்பளித்தது. இதை தொடர்ந்து வயநாடு தொகுதி எம்.பி. பதவியில் இருந்து அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். எம்.பி. பதவி பறிபோன சில தினங்களிலேயே ராகுல் காந்தி டெல்லி துக்ளக்லேன் சாலையில் உள்ள அரசு பங்களாவை காலி செய்தார். அவர் டெல்லி ஜன்பத் சாலையில் உள்ள தனது தாயார் சோனியா காந்தி இல்லத்தில் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் ராகுல் காந்திக்கு மீண்டும் எம்.பி. பதவி கிடைத்துள்ளது. 2 ஆண்டு ஜெயில் தண்டனைக்கு சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்து உத்தரவிட்டது. இதை தொடர்ந்து அவரது எம்.பி. பதவிக்கான தகுதி நீக்கம் ரத்து செய்யப்பட்டது.

எம்.பி. பதவி கிடைத்துள்ளதால் ராகுல் காந்தி அரசு பங்களாவில் மீண்டும் குடியேறலாம். அவர் காலி செய்த பிறகு அந்த வீடு யாருக்கும் ஒதுக்கப்படவில்லை. அரசு பங்களாவில் மீண்டும் வசிக்க வேண்டுமானால் பாராளுமன்ற வீட்டு வசதி குழுவிடம் ராகுல் காந்தி மீண்டும் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்த பின் ராகுல் காந்திக்கு வீடு மீண்டும் ஒதுக்கப்படும். இதுதான் விதிமுறையாகும்.

மூத்த காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மக்களவை வீட்டு வசதி குழுவிடம் அரசு பங்களா பிரச்சினையை எழுப்பினார். ஆனால் விதியின் கீழ் ராகுல் காந்தி மட்டுமே அதற்கு விண்ணப்பிக்க முடியும் என்று அவரிடம் தெரிவிக்கப்பட்டது. இதனால் ராகுல் காந்தி பாராளுமன்ற வீட்டு வசதி குழுவிடம் அரசு பங்களாவுக்காக விண்ணப்பிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: tamil news