ஈராக்கிக்கின் பாக்தாத் விமான நிலையத்தில் நேற்று அதிகாலையில் அமெரிக்கா நடத்திய வான் தாக்குதலில், ஈரான் உயர்மட்ட ராணுவ தளபதி காசிம் சோலிமானி கொல்லப்பட்டதையத்து, அமெரிக்கா, ஈரான் இடையே போர் பதற்றம் உருவாகி உள்ளது. ஈராக்கில் உள்ள அமெரிக்கர்களை உடனடியாக வெளியேறும்படி அமெரிக்க தூதரகம் உத்தரவிட்டுள்ளது.
அமெரிக்காவின் இந்த தாக்குதலால் மத்திய கிழக்கு நாடுகளிலும் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்த தாக்குதல் குறித்து, இந்திய, சீன, ரஷ்ய வெளியுறவுத்துறை கவலை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இன்று காலை மீண்டும் வடக்கு பாக்தாத் பகுதியில் வான் தாக்குதல் நடத்தப்பட்டது. ஈரான் ஆதரவாளர்கள் சென்ற வாகன அணிவகுப்பை குறிவைத்து அமெரிக்கா வான்வழி தாக்குதல் நடத்தியதாகவும், ராணுவ தளபதிக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில், பேரணியாக செல்ல திட்டமிட்டு இருந்ததால், அமெரிக்கா தாக்குதல் நடத்தியதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
வான்வழி தாக்குதலை நடத்தியதற்கு யாரும் பொறுப்பேற்கவில்லை என்ற போதிலும், அமெரிக்காவே நடத்தியதாக ஈராக் தொலைக்காட்சிகள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த தாக்குதலில், அப்பாவி மக்கள் 6 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
காசிம் சோலிமானி இறுதிச்சடங்கிற்கு முன்னதாக நடந்த இந்த தாக்குதலைத் தொடர்ந்து, அமெரிக்கா-ஈரான் இடையிலான போர் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.