X

மீண்டும் இயக்குநர் ஹரி இயக்கத்தில் சூர்யா!

சூர்யா-இயக்குனர் ஹரி கூட்டணியில் வந்த ஆறு, வேல் ஆகிய படங்கள் வெற்றி பெற்றுள்ளன. 2010-ல் மீண்டும் இவர்கள் கூட்டணியில் சிங்கம் படம் வெளியாகி வசூல் சாதனை நிகழ்த்தியது. இந்த படத்தில் சூர்யாவின் துரை சிங்கம் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்துக்கு பெரிய வரவேற்பு கிடைத்தது.

அதன்பிறகு சிங்கம் படத்தின் 2-ம் பாகம் 2013-ல் வெளியாகி அதுவும் வெற்றி பெற்றது. தொடர்ந்து சிங்கம் 3-ம் பாகம் எடுக்க வேண்டும் என்று வற்புறுத்தி வந்தனர். இதனால் சிங்கம் 3-ம் பாகம் எஸ்.3 என்ற பெயரில் தயாரானது. இந்த படத்துக்கும் வரவேற்பு கிடைத்தது. இதைத்தொடர்ந்து சிங்கம் 4-ம் பாகம் தயாராகுமா? என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

இந்த நிலையில் ஹரி இயக்கத்தில் சூர்யா மீண்டும் நடிப்பதை நடிகர் கார்த்தி உறுதிப்படுத்தி உள்ளார். ஐதராபாத்தில் நடந்த கைதி படம் நிகழ்ச்சியில் கார்த்தி கலந்து கொண்டு பேசும்போது, “அடுத்து ஹரி இயக்கும் படத்தில் நடிக்க சூர்யா தயாராகி வருகிறார்” என்றார். இந்த படம் சிங்கம் 4-ம் பாகமாக இருக்குமோ? என்ற யூகங்கள் கிளம்பி உள்ளன.

சிங்கம் 4-ம் பாகமா? அல்லது வேறு கதையா? என்பதை படக்குழுவினர் உறுதிப்படுத்தவில்லை. தற்போது சுதா கொங்கரா இயக்கும் சூரரை போற்று படத்தில் சூர்யா நடித்து முடித்துள்ளார்.