Tamilசெய்திகள்

மிளகாய் வற்றல் விலை ஏற்றம் – மக்கள் அதிர்ச்சி

மக்களின் அன்றாட வாழ்வில் தேவையான மளிகை பொருட்களில் மிகவும் இன்றியமையாதது மிளகாய் வற்றல் ஆகும். இந்தநிலையில் சென்னை கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடியில் ஒரு கிலோ மிளகாய் வற்றல் நேற்று ரூ.320-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த கிடுகிடு விலை உயர்வு இல்லத்தரசிகள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மிளகாய் வற்றல் விலை உயர்வு குறித்து கோயம்பேடு உணவு தானிய மொத்த விற்பனை அங்காடி வியாபாரி பி.பாண்டியராஜன் கூறியதாவது:-

கடந்த மாதம் ரூ.180-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ மிளகாய் வற்றல் தற்போது ரூ.140 விலை உயர்ந்து ரூ.320-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இது சுமார் 78 சதவீத விலை ஏற்றம் ஆகும். சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு ஆந்திராவின் குண்டூர் மற்றும் தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டத்தின் பரமக்குடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மிளகாய் வற்றல் விற்பனைக்கு வருகிறது. கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு பெய்த கனமழை காரணமாக ஆந்திராவின் குண்டூர் பகுதியில் மிளகாய் வற்றல் முதல் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டது.

இதனால், சென்னை கோயம்பேட்டுக்கு மிளகாய் வற்றல் வரத்து மிகவும் குறைந்தது. மேலும், அரபு நாடுகள், இலங்கை போன்ற நாடுகளுக்கு பெருமளவில் மிளகாய் வற்றல் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. குறைவான விளைச்சல் நேரத்தில் இவ்வாறு மிளகாய் வற்றலின் தேவை அதிகரித்ததால் அதன் விலை அதிகரித்துள்ளது.

பொதுவாகவே மழைக்காலத்தையொட்டி மிளகாய் வற்றல் விலை ரூ.200 வரை அதிகரிக்கும். ஆனால் இந்த ஆண்டு பெட்ரோல், டீசல் விலை உயர்வால் போக்குவரத்து செலவு அதிகரித்துள்ளதாலும் மிளகாய் வற்றல் விலை மிகவும் கூடியுள்ளது. அதேநேரத்தில் மற்ற மளிகை பொருட்கள் அதிக அளவு விலை உயராமல் உள்ளன.

ரூ.97-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ துவரம் பருப்பு ரூ.108-க்கும், ரூ.64-க்கு விற்பனை செய்யப்பட்ட கடலை பருப்பு ரூ.72-க்கும், ரூ.96-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ பாசிப்பயிறு ரூ.102-க்கும், ரூ.104-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ உளுந்து ரூ.120-க்கும், ரூ.85-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ பச்சைப்பயிறு ரூ.105-க்கும், ரூ.96-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ பூண்டு ரூ.105-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

ஆனால், உலகச் சந்தையில் ஏற்பட்டுள்ள விலை வீழ்ச்சியால் சமையல் எண்ணெய் விலை சற்று குறைந்துள்ளது. ரூ.240-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு லிட்டர் சூரியகாந்தி எண்ணெய் தற்போது ரூ.180-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ரூ.170-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு லிட்டர் பாமாயில் ரூ.140-க்கு விற்பனை செய்யப்படுகிறது. நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய் போன்றவற்றின் விலையில் பெரிய மாற்றம் இன்றி முறையே லிட்டருக்கு ரூ.195, ரூ.190, ரூ.180-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.