தமிழில் முன்னணி இயக்குனராக இருக்கும் ஏ.ஆர்.முருகதாஸ், அஜித் நடித்த தீனா படம் மூலம் திரையுலகில் அறிமுகமானார். இப்படம் அஜித்தை ஆக்ஷன் ஹீரோவாக தரம் உயர்த்தியது என்றே சொல்லலாம். அதேபோல் அஜித்தை அவரது ரசிகர்கள் செல்லமாக தல என அழைப்பர். அதுவும் இந்த படத்தில் இருந்து வந்ததுதான். இப்படி அறிமுக படத்திலேயே அசர வைத்த முருகதாஸ், மீண்டும் அஜித்தை வைத்து மிரட்டல் என்ற படத்தை இயக்க இருந்தார். ஆனால் சில பிரச்சனைகள் காரணமாக அஜித் அப்படத்தில் இருந்து விலகினார். இந்த கதையை தான் சூர்யாவை வைத்து கஜினி என்ற பெயரில் படமாக எடுத்தார் முருகதாஸ்.
இந்நிலையில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் தர்பார் படம் வருகிற 9-ந் தேதி திரைக்கு வருகிறது. அதற்கான புரமோஷன் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ள முருகதாஸ் அஜித் குறித்த சுவாரஸ்யமான தகவலை தெரிவித்துள்ளார். மிரட்டல் படத்தின் கதையை அஜித்திடம் சொன்னதும், அவர் இந்த கதாபாத்திரத்திற்கு சிக்ஸ் பேக் வைத்தால் தான் சரியாக இருக்கும் என யோசனை கூறியுள்ளார். அதுவரை எனக்கு அந்த ஐடியாவே இல்லை, அவர் சொன்ன பிறகு தான் அது சரியாக இருக்கும் என எண்ணினேன். இருப்பினும் இந்த கூட்டணி அமையாத போதிலும், அதே கதையில் நடித்த சூர்யா மற்றும் அமீர்கான் இருவரும் சிக்ஸ் பேக் வைத்து நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.