அண்டை நாடான மியான்மரில் கடந்த மாதம் 29-ந்தேதி சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. இதில் ஏராளமான கட்டிடங்கள், அடுக்கு மாடி குடியிருப்புகள், வணிக வளாகங்கள் இடிந்து தரை மட்டமானது. தலைநகர் நய்பிடாஸ், மண்டாலே ஆகிய நகரங்கள் உருக்குலைந்து போனது. இந்த நில நடுக்கத்தில் சிக்கி 3 ஆயிரம் பேருக்கு மேல் பலியானார்கள்.
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மியான்மருக்கு இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் உதவி செய்து வருகின்றன. ஆபரேஷன் பிரம்மா என்ற பெயரில் இந்திய பாதுகாப்பு படையினர் மியான்மரில் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் அங்கு மீட்பு பணியை மேற்கொண்ட இந்திய விமானப்படைக்கு சொந்தமான விமானம் மீது சைபர் தாக்குதல் நடந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த சைபர் தாக்குதலால் நடுவானில் பறந்த விமானத்தின் விமானிகளுக்கு தவறான தகவல்கள் கிடைக்க தொடங்கியது. இதனால் விமானிகள் குழப்பம் அடைந்தனர். உடனே சுதாரித்துக்கொண்ட அவர்கள் அவசரகால சிக்னல்களை பயன்படுத்தி உண்மையான நிலவரங்களை கண்டறிந்தனர்.
இதையடுத்து இந்த சைபர் தாக்குதலை பாதுகாப்பு படையினர் வெற்றிகரமாக முறியடித்தனர்.
