Tamilசெய்திகள்

மியான்மரில் சிக்கி தவிக்கும் தமிழர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – சீமான், கமல்ஹாசன் அறிக்கை

மியான்மர் நாட்டில் தவிக்கும் தமிழர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கமல்ஹாசன், சீமான் ஆகியோர் வலியுறுத்தி உள்ளனர்.

இது குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தாய்லாந்து நாட்டிற்கு வேலை தேடிச் சென்ற தமிழக இளைஞர்கள் உள்ளிட்ட இந்தியர்களை மியான்மர் நாட்டுக்கு கடத்திச் சென்று, சட்ட விரோதச் செயல்களில் ஈடுபடுத்தி, கொடுமைப் படுத்துவதாக வரும் தகவல் அதிர்ச்சி அளிக்கிறது. அவர்களை உடனடியாக மீட்க மத்திய அரசு துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் இதுகுறித்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

வெளிநாடு வேலை என்று கூறி அழைத்துச் செல்லப்பட்டு ஏமாற்றப்பட்ட தமிழர்கள் மியான்மர் நாட்டுச் சிறையில் சிக்கித் தவிக்கும் காணொலி அதிர்ச்சியளிக்கிறது. தற்போது மியான்மர் நாட்டுச் சிறையில் சிக்கித் தவிக்கும் தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த இளைஞர்களை மீட்க தூதரகம் மூலம் இந்திய ஒன்றிய அரசு விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், தமிழர்கள் மீட்கப்பட்டு அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படுவதை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில அரசுகள் தொடர்ந்து கண்காணித்து உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.