Tamilசெய்திகள்

மியான்மரில் இரண்டு தமிழ் இளைஞர்கள் சுட்டுக் கொலை

மணிப்பூர் மாநிலத்தில் உள்ள மோரெக் பகுதியில் வசித்து வந்தவர்கள் தமிழ் வம்சாவளியை சேர்ந்த மோகன் (28), அய்யனார் (35). இவர்கள் வசித்த பகுதியில் இந்தியா-மியான்மர் நாட்டு எல்லை உள்ளது. இங்கிருந்து மியான்மர் நாட்டின் எல்லை வழியாக சென்று சிலர் வேலை பார்த்து வருகிறார்கள். அதேபோல் தற்போது ராணுவ ஆட்சி நடைபெறும் மியான்மரில் மோகன், அய்யனார் இருவரும் குடியேறினர்.

அங்கு மோகன் ஆட்டோ டிரைவராகவும், அய்யனார் கடை வைத்தும் வேலை பார்த்தனர். இந்த நிலையில் இந்தியா-மியான்மர் எல்லையில் மோகன், அய்யனார் இருவரும் பிணமாக கிடந்தனர். அவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டு இருப்பது தெரிய வந்தது. இருவரின் நெற்றியிலும் குண்டு பாய்ந்து இருந்தது. அவர்களது உடல்கள் இந்தியா-மியான்மர் எல்லையில் இருந்து 4 கிலோ மீட்டர் தொலைவில் தமு என்ற பகுதியில் கிடந்தது.

2 தமிழ் இளைஞர்களை மியான்மரை சேர்ந்த பயங்கரவாத குழு சுட்டுக் கொன்றதாக மணிப்பூர் மாநில போலீசார் தெரிவித்தனர். இது குறித்து அவர்கள் கூறும்போது, மியான்மர் நாட்டில் செயல்படும் ‘பியூ ஷா தீ’ என்ற பயங்கரவாத குழுவை சேர்ந்தவர்கள் மோட்டார் சைக்கிளில் வந்து மோகன், அய்யனார் ஆகிய 2 பேரையும் சுட்டுக் கொன்று உள்ளனர்.

அவர்கள் உடல்கள் மியான்மரில் உள்ள ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு உள்ளது. அவர்கள் எல்லை பகுதிக்குள் ஏன் நுழைந்தார்கள் என்பது பற்றி விசாரித்து வருகிறோம் என்றனர். சுட்டுக் கொல்லப்பட்ட மோகனுக்கு கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக மணிப்பூர் மாநில முதல்-மந்திரி நோங்தோம்பம் பிரென் கூறும்போது, மியான்மர் ராணுவத்தின் பின்னணியில் உள்ள பயங்கரவாத குழு சுட்டுக் கொன்று இருக்கலாம் என்று தெரிவித்தார்.

2 தமிழ் இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு மோரெக்சில் செயல்படும் தமிழ் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக தமிழ் சங்கத்தினர் கூறியதாவது:-

மியான்மரில் ராணுவ ஆட்சி ஏற்பட்டதையடுத்து மத்திய அரசு வழிகாட்டுதல்படி சர்வதேச எல்லை மூடப்பட்டது. ஆனால் இரு நாட்டு மக்களும் தங்களது வர்த்தக வாழ்வாதாரம் உள்ளிட்ட காரணங்களுக்காக எல்லையை கடந்து செல்கிறார்கள். 2 தமிழ் இளைஞர்களை உளவு பார்த்ததாக மியான்மர் ராணுவம் சந்தேகித்து இருக்கலாம். சுட்டுக்கொல்லப்பட்ட இருவரும் மோரொக் பகுதியில் பிறந்து வளர்ந்தவர்கள். அவர்கள் அப்பாவிகள். இவர்களின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர முயற்சித்து வருகிறோம் என்றனர்.

இந்த படுகொலையை கண்டித்து மோரெக் பகுதியில் கடைகளை அடைத்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மோரொக் பகுதியில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ் வம்சாவளியினர் வசித்து வருகிறார்கள். 1960-ம் ஆண்டு மியான்மரில் நடந்த வன்முறையின்போது யாங்கூனில் இருந்து மோரெக்குக்கு ஏராளமான தமிழர்கள் அகதிகளாக தஞ்சம் அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.