Tamilசெய்திகள்

மின் கட்டணத்தை உயர்த்தும் திட்டத்தை கைவிட வேண்டும் – டாக்டர் ராமதாஸ் அறிக்கை

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தமிழ்நாட்டில் மின்கட்டணங்களை ஓர் அலகிற்கு 27.50 பைசா முதல் ரூ.1.25 உயர்த்தப் போவதாக தமிழக அரசு அறிவித்திருக்கிறது. மின்சார பயன்பாட்டின் அடிப்படையில் சில பிரிவினருக்கு 52 சதவீதம் வரை கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டிருக்கிறது.

அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களால் மின் கட்டண உயர்வை தாங்கிக் கொள்ள முடியாது. தவிர்க்கவே முடியாத சூழலில் மின்சாரக் கட்டணத்தை ஓரளவு உயர்த்துவதைக் கூட நியாயப்படுத்த முடியும். ஆனால், அனைத்துப் பிரிவினருக்கும் சராசரியாக 20 விழுக்காடு அளவுக்கும், அதிகபட்சமாக 52சதவீதம் வரையிலும் மின்சாரக் கட்டணத்தை உயர்த்துவது நியாயமற்றது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வு, சமையல் எரிவாயு விலை உயர்வு, அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்வு, ஜி.எஸ்.டி வரி உயர்வு ஆகியவற்றால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் கொரோனா தொற்று பரவல் உள்ளிட்ட காரணங்களால் மக்களின் வருவாய் பாதிக்கப்பட்டுள்ளது.

இத்தகைய சூழலில் மின்சாரக் கட்டண உயர்வை அவர்களால் தாங்கிக் கொள்ள முடியாது; அவர்களின் வாழ்வில் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, தமிழ்நாடு அரசு உத்தேசித்துள்ள மின்சாரக் கட்டண உயர்வை கைவிட வேண்டும்.

இது தொடர்பாக மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் கொடுத்துள்ள திட்டத்தை திரும்பப் பெற வேண்டும். நிர்வாக சீர்திருத்தங்களின் மூலம் மின் வாரியத்தை லாபத்தில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.