Tamilசெய்திகள்

மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பு – வீடு வீடாக செல்லும் மின்சார ஊழியர்கள்

தமிழகத்தில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி கடந்த நவம்பர் மாதம் 15-ந் தேதி தொடங்கியது. தொடக்கத்தில் ஆதார் எண்ணை இணைக்க பொதுமக்கள் தயக்கம் காட்டினர். பின்னர் இதனால் இலவச மின்சாரம் துண்டிக்கப்படாது என்று அரசு சார்பில் விளக்கம் அளித்ததை தொடர்ந்து ஆதாரை இணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தமிழ்நாட்டில் உள்ள 2 கோடியே 67 லட்சம் மின் நுகர்வோரின் இணைப்புடன் ஆதார் இணைப்பதற்கு முதலில் டிசம்பர் 31-ந்தேதி வரை அவகாசம் கொடுக்கப்பட்டது. பெரும்பாலானவர்கள் ஆதாரை இணைக்காததால் ஜனவரி 31-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டது.

மேலும் ஒரு மாத காலம் அவகாசம் கொடுக்கப்பட்டதால் பொதுமக்கள் மின்சார வாரிய அலுவலகங்களிலும், கம்ப்யூட்டர் சென்டரிலும் சென்று ஆதாரை இணைத்தனர். ஆனாலும் 40 லட்சம் பேர் ஆதாரை இணைக்காமல் இருந்தனர். அதனால் மேலும் 15 நாட்கள் நீட்டிப்பு செய்யப்பட்டது. வருகிற 15-ந்தேதியுடன் கால அவகாசம் முடிவடைகிறது. இதற்கு பிறகு மீண்டும் கால நீட்டிப்பு செய்யப்பட மாட்டாது என்று அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தார். இதையடுத்து மீதமுள்ள மின்நுகர்வோர்கள் ஆதாரை இணைப்பதில் தீவிரம் காட்டினார்கள். 90 சதவீதத்திற்கு மேல் ஆதாரை இணைத்துவிட்ட நிலையில் மின்வாரிய ஊழியர்களும் களத்தில் இறங்கினர். இன்னும் 4 நாட்களே இருப்பதால் வீடுவீடாக சென்று ஆதாரை இணைத்து வருகின்றனர்.

மின் இணைப்புடன் ஆதாரை இணைக்காதவர்கள் பெயர் விவரங்களை சேகரித்து அவர்களின் வீட்டிற்கே சென்று ஆதாரை இணைக்கின்றனர். சென்னை உள்ளிட்ட அனைத்து நகரங்களிலும் ஆதார் எண் இணைக்கும் பணி முழுவீச்சில் நடந்து வருகின்றன. சொந்த வீட்டில் வசிப்பதாக இருந்தாலும் அவர்களின் ஆதார் எண்ணை வாங்கி அந்த இடத்திலேயே பதிவு செய்கின்றனர். வாடகை வீடுகளில் வசிப்பவர்களிடம் வீட்டின் உரிமையாளர் செல்போன் எண்ணை வாங்கி அங்கிருந்தவாறே ஆதார் எண்ணை பெற்று மின் ஊழியர்கள் பதிவு செய்கின்றனர். ஒரு வீட்டில் 4, 5, 6 பதிவு மின் இணைப்புகள் இருந்தாலும் அனைத்திற்கும் ஒரே ஆதார் எண்ணை பதிவு செய்து இந்த பணியை விரைவாக முடிக்கிறார்கள். 15-ந்தேதிக்குள் 100 சதவீதம் ஆதார் இணைப்பு பணி முடிய வேண்டும் என்ற இலக்கோடு களத்தில் இறங்கி பணியாற்றி வருகின்றனர்.