மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் ஒரு யூனிட்டுக்கு ரூ.8!
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக வருவாய் பிரிவு தலைமை நிதி கட்டுப்பாட்டாளர் மலர்விழி கூறியதாவது:-
மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க பலர் தயங்குவது ஏன் என்று தெரியவில்லை. ஆதாரை இணைக்க 2 நிமிடம் நேரம் போதும். மின் கட்டணம் செலுத்தும் இடங்களில் இதற்காக தனியாக கூடுதல் பணியாளர் நியமிக்கப்பட்டுள்ளார். உரிமையாளர் தான் செல்ல வேண்டும் என்று அவசியம் இல்லை. யாரிடம் வேண்டுமானாலும் ஆதாரை கொடுத்து அனுப்பலாம். ஆதாரை கொண்டு வருபவர் தனது செல்போன் எண்ணை சொன்னாலும் அந்த ஓ.டி.பி.யை வைத்து பதிந்து விடலாம். 2 கோடியே 30 லட்சம் வீட்டு உபயோகிப்பாளர்களில் இதுவரை 5½ லட்சம் பேர் ஆதாரை இணைத்துள்ளனர்.
தமிழ்நாட்டில் 60 லட்சம் பேர் 100 யூனிட்டுக்குள் வருகிறார்கள். அவர்களுக்கு எந்த சிக்கலும் கிடையாது. அதேபோல் பொது பயன்பாடு மீட்டர் 2 லட்சத்து 88 ஆயிரம் பேர் வைத்துள்ளனர். அவர்கள் முழு தொகையை கட்டணமாக செலுத்துவதால் அவர்களுக்கும் பிரச்சினை இல்லை. வீட்டு உபயோகத்தில் 2 கோடியே 30 லட்சம் மீட்டருக்கு 100 யூனிட் மானியம் வழங்கப்படுகிறது. இதில் ஒரு வீட்டுக்கு ஒரு இணைப்புதான் என்ற அடிப்படையில் ஆதாரை இணைக்க சொல்கிறோம். சப் மீட்டர் வைத்திருந்தால் அது எங்கள் கணக்கில் வராது. முழு ரீடிங்தான் கணக்கில் எடுக்கப்படும். ஆனால் தனித்தனி வீடாக இருந்து தனித்தனி சர்வீஸ் வாங்கி இருந்தால் அந்த வீடுகளுக்கு 100 யூனிட் மானியம் கிடைக்கும்.
அடுக்குமாடி குடியிருப்புகளில் பொது பயன்பாட்டு பகுதிகளில் ‘காமன்’ வராண்டா, மொட்டை மாடி, காம்பவுண்டு பகுதிகளில் உள்ள மின் விளக்குகளுக்கு தனியாக மீட்டர் வைத்திருந்தால் அதற்கு மானியம் கிடையாது. முழு தொகையை தான் செலுத்த வேண்டும். அதாவது முழு தொகையையும் செலுத்தும் அந்த மீட்டருக்கு ஆதார் எண்ணை பதிய வேண்டியதில்லை. ஒரு வீட்டில் ஒரே பெயரில் 2 மின் இணைப்பு இருந்தால் அதை ஆதார் மூலம் கண்டறிந்து ஒரு மீட்டராக கணக்கில் கொண்டு வருவோம். இல்லையென்றால் இன்னொரு மீட்டர் அவசியம் என்றால் அதற்கு பொது பயன்பாடு கட்டணமாக யூனிட் 8 ரூபாய் கணக்கில் வரும்.
ஒருவருக்கு வெவ்வேறு முகவரியில் பல வீடுகள் இருந்தால் அதற்கு 100 யூனிட் மானியம் கிடைக்கும். வாடகைக்கு வீடு வைத்திருப்பவர்கள் சர்வீஸ் கணக்கை வைத்து வாடகைதாரர் பெயரில் கூட ஆதாரை இணைக்கலாம். அதற்கு தடையேதும் கிடையாது. வீடுகளுக்கு ரீடிங் எடுக்க வருபவர்கள் வழக்கம் போல் வந்து கணக்கெடுப்பார்கள். ஆதாரை இணைத்த பிறகுதான் வருவார்கள் என்பது கிடையாது. மின் கட்டணம் செலுத்தும் கடைசி தேதிக்கு பிறகும் பணம் கட்டாமல் ஆதாரை 2 நாளில் இணைக்காமல் இருந்தால் மின் இணைப்பு வழக்கம் போல் துண்டிக்கப்படும். 100 யூனிட் மானியம் பெறுபவர்கள் தகுதியான பயனாளிகள் தானா? என்பதை கண்டறியவும் ஆதார் இணைப்பு அவசியமாகிறது. எனவே பொது பயன்பாட்டில் முழு தொகையையும் செலுத்துபவர்கள், வணிக பயன்பாட்டில் மின் கட்டணம் செலுத்துபவர்கள் ஆதாரை இணைக்க வேண்டியது இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.