Tamilசெய்திகள்

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம்!

தமிழகத்தில் 3 கோடிக்கு மேல் மின் இணைப்புகள் உள்ளன. 2 மாதத்துக்கு ஒருமுறை மின் பயன்பாடு கணக்கிடப்பட்டு அதற்கான கட்டணத்தை செலுத்த அறிவுறுத்தப்படுகிறது. மின்வாரிய இணையதளம், மின்வாரிய செயலி, கூகுள் பே, போன் பே செயலிகள் மூலம் ஏராளமானோர் மின் கட்டணத்தை செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று தமிழ்நாடு மின்வாரியம் அறிவித்தது. இதுதொடர்பாக மின்நுகர்வோரின் செல்போன் எண்ணுக்கும் மின்வாரியம் குறுஞ்செய்தி அனுப்பியது. நேரடியாக மின் கட்டணம் செலுத்தும் வாடிக்கையாளர்கள் தங்களது ஆதார் அட்டையின் நகலை எடுத்து சென்று மின் கட்டணம் செலுத்தும் போதே ஆதார் நகலை கொடுத்து ஆதார் எண்ணை இணைத்துக்கொள்ளலாம் என்றும், ஒன்றுக்கும் மேற்பட்ட மின் இணைப்பு வைத்துள்ளவர்கள் அனைத்து மின் இணைப்புகளுக்கும் ஒரே ஆதார் எண்ணை இணைக்கலாம் என்றும், வாடகை வீட்டில் குடியிருப்பவர்கள் தங்கள் ஆதார் எண்ணை அந்த வீட்டு மின் இணைப்புடன் இணைக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதைத்தொடர்ந்து மின் நுகர்வோர் தங்களது ஆதார் எண்ணை மின் இணைப்புடன் இணைத்து வருகின்றனர். இதுவரை சுமார் 3 லட்சம் பேர் ஆதார் எண்ணை இணைத்து உள்ளதாக மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. ஆதார் எண்ணை இணைப்பதால் 100 யூனிட் இலவச மின்சாரத்துக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என மின்சார வாரியம் அறிவித்துள்ள போதிலும் ஒன்றுக்கும் மேற்பட்ட மின் இணைப்பு வைத்திருப்போர் அவை அனைத்துக்கும் தங்களது ஒரே ஆதார் எண்ணை பதிவு செய்வதால் ஏதேனும் சிக்கல் வருமோ என்ற அச்சத்தில் உள்ளனர். இதுபோன்ற பல்வேறு காரணங்களினால் பலர் ஆதார் எண்ணை மின் இணைப்புடன் இணைக்க முன்வருவதில் தயக்கம் காட்டி வருகின்றனர்.

இதனை கருத்தில் கொண்ட மின்வாரியம் மின் இணைப்பை ஆதார் எண்ணுடன் இணைத்தால் மட்டுமே மின் கட்டணத்தை செலுத்த முடியும் என்ற வகையில் திடீர் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. கடந்த சில நாட்களாக இணையதளம் மூலம் மின் கட்டணம் செலுத்த முயன்ற மின் நுகர்வோருக்கு மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டியது குறித்து தெரிவிக்கப்படுகிறது. பின்னர், ஆதாரை இணைக்கும் பக்கத்துக்கு தானாகவே சென்று ஆதார் எண் உள்ளிட்ட விவரங்களை பதிவிடும்படி அறிவுறுத்தப்படுகிறது. தேவையான விவரங்களை பதிவு செய்தால் மட்டுமே மின் கட்டணத்தை செலுத்தும் பக்கத்திற்கு செல்லும் வகையில் அந்த இணையதளத்தில் மின்வாரியம் மாறுதல்களை செய்துள்ளது.

அதேபோன்று கூகுள் பே, போன் பே போன்ற செயலிகளை நடத்தி வரும் நிறுவனங்கள் மூலம் மின் கட்டணத்தை செலுத்த முயற்சி மேற்கொள்பவர்களுக்கும் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும்படி குறுஞ்செய்தி அனுப்ப மின்வாரியம் அறிவுறுத்தி உள்ளது. இதன்மூலம் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத்தால் மட்டுமே மின் கட்டணத்தை செலுத்த முடியும் என்ற நிலையை மின்வாரியம் ஏற்படுத்தி உள்ளது. மின் கட்டணம் செலுத்த நிர்ணயிக்கப்பட்டுள்ள கடைசி நாளில் இணையதளம் மூலம் கட்டணத்தை செலுத்த முயன்ற பலர் ஆதார் எண்ணை இணைக்காததால் கட்டணத்தை செலுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மின்வாரியத்தின் இந்த திடீர் நடவடிக்கை நுகர்வோர் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத்த பிறகும் மின் கட்டணத்தை செலுத்துவதில் சிக்கல் இருப்பதாக புகார் எழுந்துள்ளது. அதாவது, ஆதார் எண்ணை இணைத்த சிலருக்கு மீண்டும் ஆதார் எண்ணை இணைக்கும்படி கேட்பதாகவும், இன்னும் சிலருக்கு தங்களது ஆதார் பதிவு ஏற்கப்படவில்லை, மீண்டும் முயற்சிக்கவும் என பதில் வருவதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து மின்வாரிய உயர் அதிகாரிகள் கூறும்போது, ‘இணையதளம் மூலம் ஆதார் எண்ணை இணைக்கும் போது ஆதார் எண்ணை அதிகாரிகள் சரிபார்த்து ஒப்புதல் அளித்த பின்பே இணைப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது. இதற்கு சில நாட்கள் எடுத்துக்கொள்ளப்படுகிறது. மின்வாரிய அலுவலகத்தில் நேரடியாக ஆதாரை இணைக்கும் போது உடனடியாக இணைப்பு மேற்கொள்ளப்படுகிறது. ஆதார் இணைப்பு தொடர்பான மின் நுகர்வோரின் தொழில்நுட்ப புகார்கள் மீது அவ்வப்போது நடவடிக்கை மேற்கொண்டு சரி செய்யப்படுகிறது. மின் கட்டணம் செலுத்த ஆதார் இணைப்பு அவசியம் என்பது போன்று ஒரு கெடு விதிக்கப்படாத போது ஆதார் எண்ணை இணைக்கும் பணி முழுமை அடையாது’ என்றார்.

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதில் சிக்கல் ஏற்பட்டு அதன்மூலம் மின் கட்டணத்தை செலுத்த முடியாத நிலை ஏற்படும்போது மின் இணைப்பு துண்டிப்பு உள்ளிட்ட அதிகபட்ச தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டு விடுவோமோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் உள்ளது. மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க உரிய கால அவகாசம் அளிக்கப்பட வேண்டும், ஆதாரை இணைத்தால் தான் மின் கட்டணமே செலுத்த முடியும் என்ற கெடுபிடியை தளர்த்த வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

ஆதார் எண்ணை இணைப்பது எப்படி?

* ஆதார் எண்ணை மின் இணைப்புடன் இணைக்கும் பணியை தொடங்குவதற்கு முன்பாக தங்களது ஆதார் அட்டை மற்றும் மின் இணைப்பு அட்டை ஆகியவற்றை தயாராக வைத்திருக்க வேண்டும்.

* ஆதார் அட்டையின் புகைப்படத்தையும் பதிவேற்றம் செய்ய வேண்டி இருப்பதால் 300 ‘கே.பி.’ அளவுக்கு அதனை தயாராக வைத்திருக்க வேண்டும்.

* தமிழ்நாடு மின்சார வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.tangedco.gov.in என்ற இணையதள பக்கத்திற்கோ அல்லது https://adhar.tnebltd.org/adharupload/ என்ற இணையதள பக்கத்திற்கோ சென்று ஆதாரை இணைக்கும் பணியை தொடங்க வேண்டும்.

* முதலில் மின் இணைப்பு எண், அதன்பின்பு செல்போன் எண் ஆகியவற்றை பதிவிட வேண்டும். இதன்பின்பு செல்போன் எண்ணுக்கு ஓ.டி.பி. வரும். அதனை பதிவிட வேண்டும்.

* அடுத்த பக்கத்தில் உரிமையாளரின் பெயர் உள்ளிட்ட விவரங்கள் கேட்கப்படும். இணைக்கப் போகும் ஆதார் எண் உரிமையாளருடையதா அல்லது வாடகைதாரரின் ஆதார் எண்ணா என்று விவரமும் கேட்கப்படும். சரியான தகவலை அளித்து, ஆதார் எண்ணை இடைவெளி இல்லாமல் பதிவு செய்ய வேண்டும். பின்னர், ஆதார் எண்ணில் இருக்கும் பெயரை பதிவிட வேண்டும்.

* இதன் பின்பு தயாராக வைத்திருக்கும் 300 ‘கே.பி.’ அளவுள்ள புகைப்படத்தை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

* பின்னர், கொடுக்கப்பட்டிருக்கும் தகவல்கள் அனைத்தும் உண்மையானவை என சான்றளித்து ‘சப்மிட்’ செய்ய வேண்டும். இதன்பிறகு உங்களது ஆதார் எண் சமர்ப்பிக்கப்பட்டது. விரைவில் இணைப்பு உறுதி செய்யப்படும் என்ற பதில் வரும். இத்தோடு ஆதாரை இணைக்கும் பணி முடிவடையும்.

* வாடகை வீட்டில் குடியிருப்போர் மின் இணைப்புடன் தங்களது ஆதார் எண்ணை இணைக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு வாடகைக்கு குடியிருப்போர் ஆதார் எண்ணை இணைக்கும் போது சம்பந்தப்பட்ட நபர் தங்களது வீட்டில் தான் வாடகைக்கு குடியிருக்கிறாரா என வீட்டின் உரிமையாளருக்கு குறுஞ்செய்தி மூலம் உறுதி செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.