Tamilசெய்திகள்

மின்சார கட்டணத்தை உயர்த்த கூடாது – டாக்டர்.ராமதாஸ் அறிவிப்பு

பா.ம.க. நிறுவனர் டாக்டர்   ராமதாஸ்  வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் மின் கட்டணம், குடிநீர் கட்டணத்தை உயர்த்துவதை தவிர வேறு வழியே இல்லை என்று நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன் கூறியிருக்கிறார். கொரோனா பரவல் காரணமாக வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் மக்கள் மீது கூடுதல் சுமையை சுமத்த நினைப்பது நியாயமற்றது. தமிழ்நாட்டின் நிதிநிலைமை மிகவும் மோசமாக இருப்பது உண்மை. ஆனால் மின்சார கட்டணம், பஸ் கட்டணம் ஆகியவை தமிழ்நாட்டில் ஏற்கனவே அதிகமாக இருக்கும் நிலையில், இன்னொரு கட்டண உயர்வை மக்களால் சமாளிக்க முடியாது. மின்சார வாரியமோ, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகங்களோ கடுமையான இழப்பில் இயங்குகின்றன என்றால், அதற்கான காரணம் என்ன? என்பதை கண்டறிந்து அதை சரி செய்வது தான் சரியான நடவடிக்கையாக இருக்கும்.

வெளிநாடுகளில் ஆயிரம் மெகாவாட் வரையிலான அனல் மின்திட்டங்கள் 51 மாதங்களில் நிறைவேற்றி முடிக்கப்படுகின்றன. தமிழ்நாட்டிலும் அதேவேகத்தில் மின்திட்டங்கள் செயல்படுத்தி முடிக்கப்பட்டால், திட்டச்செலவும், மின்சார உற்பத்தி செலவும் கணிசமாக குறையும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.