Tamilசெய்திகள்

மின்சாரம் தாக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி – குமரி மாவட்டத்தில் பரபரப்பு

குமரி மாவட்டத்தில் கடந்த ஒரு மாதமாகவே பெய்து வந்த சாரல் மழை தற்போது கனமழையாக மாறியுள்ளது. கடந்த 4 நாட்களாகவே மாவட்டம் முழுவதும் இடைவிடாது கனமழை பெய்து வருகிறது. கால்வாய்கள் மற்றும் ஆறுகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. குமரி மாவட்டத்தில் நேற்று காலை 8 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக குருந்தன்கோட்டில் 134 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது. மழை பகுதிகளிலும், அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளிலும் பெய்து வரும் கனமழை காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.

கனமழை காரணமாக திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. தொப்பவிளையை சேர்ந்தவர் சேம் (வயது47). இவர் வாழைக்குலை வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு ஜெயசித்ரா (45) என்ற மனைவியும், ஆதிரா (24) என்ற மகளும், அஸ்வின் (21) என்ற மகனும் இருந்தனர். மகன் அஸ்வின் கன்னியாகுமரி அருகே உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார். மகள் ஆதிராவுக்கு திருமணமாகி 8 மாத கர்ப்பிணியாக இருந்தார். இதையடுத்து அவர் தனது தாய் வீட்டில் தங்கியிருந்தார்.

இந்தநிலையில் நேற்று சேம் வியாபாரம் தொடர்பாக வெளியூர் சென்றிருந்தார். மாலை 6 மணியளவில் அந்த பகுதியில் மழை பெய்து கொண்டிருந்தது. அந்த சமயத்தில் இவர்களது பக்கத்து வீட்டின் தகர கூரை மீது மின்ஒயர் பட்டு மின்சாரம் பாய்ந்து கொண்டிருந்துள்ளது. இந்தநிலையில், அஸ்வின் வீட்டில் இருந்த இரும்பு கம்பியுடன் வெளியே வந்தார். அந்த கம்பி எதிர்பாராமல் பக்கத்து வீட்டில் உள்ள தகர கூரையின் மீது உரசியது. இதில் அவர் மீது மின்சாரம் பாய்ந்து அலறினார். உடனே தாய் ஜெயசித்திரா மற்றும் சகோதரி ஆதிரா ஆகியோர் ஓடி வந்து அவரை பிடித்து காப்பாற்ற முயன்றனர். இதில் அவர்கள் மீதும் மின்சாரம் பாய்ந்தது. 3 பேரும் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.