Tamilசெய்திகள்

மின்சாரம், குடிநீர் இல்லாமல் பல நாட்கள் வாழ்ந்தோம் – உக்ரைனில் இந்திய மாணவர்கள் பேட்டி

ராமநாதபுரம் மாவட்டம் அழகன்குளத்தை சேர்ந்த நவாஸ்அலி மகன் முகமது ஆதிம் (வயது 21). இவர் உக்ரைன் நாட்டில் கீவ் நகரில் உள்ள மெட்ரோ மொகலா என்னுமிடத்திலுள்ள மருத்துவக் கல்லூரியில் 4-ம் ஆண்டு படித்து வந்தார்.

உக்ரைன்-ரஷியா போரின் காரணமாக இந்திய மாணவர்கள் அங்கிருந்து நாடு திரும்பி வருகின்றனர். அதன்படி ராமநாதபுரம் வந்த முகமது ஆதிம் நிருபர்களிடம் கூறியதாவது:-

உக்ரைன் மீது ரஷியா தாக்குதலை தொடங்கியதும், கீவ் நகரில் நான் வாடகைக்கு இருந்து வரும் கட்டிடத்தின் கீழே உள்ள பதுங்குமிடத்தில் தங்க வைக்கப்பட்டேன். என்னுடன் இந்திய மாணவர்கள் சுமார் 276 பேர் வரை இருந்தனர். அவர்களில் 67 போ தமிழகத்தை சேர்ந்தவர்கள்.

பதுங்குமிடத்தில் இரவு, பகல் தெரியாமலேயே பல நாள்கள் தங்கியிருந்தோம். மின்சாரம், குடிநீர் வசதிகள் கூட சரிவர இல்லாத நிலையே நீடித்தது. ரஷிய தாக்குதலில் நாங்கள் தங்கியிருந்த கட்டித்தின் அருகேயிருந்த நவீன சந்தை மற்றும் 11 மாடிகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகள் முற்றிலும் தரைமட்டமாகின.

அடிக்கடி கேட்ட குண்டு வெடிப்பு சத்தத்தால் மிகுந்த அச்சத்துடனேயே இருந்து வந்தோம். தமிழகத்தின் மீட்பு கட்டுப்பாட்டு அறையின் வாட்ஸ்ஆப் குழுவில் 400 பேர் வரை சேர்க்கப்பட்டு அதில் காட்டிய வழிமுறைப்படி மீட்கப்பட்டோம்.

கீவ் நகரிலிருந்து ருமேனியா செல்ல 12 கிலோ மீட்டர் தொலைவு நடந்துவந்தோம். உக்ரைன் ராணுவ வீரர்கள் வழிகாட்டினர். அப்போது, எங்களை சுற்றி சுமார் 150 மீட்டர் தொலைவுக்கு அப்பால் குண்டுகள் வெடித்ததை பார்த்துக்கொண்டே அச்சத்துடன் நடந்து வந்தோம்.

பின்னர் வாகனத்தில் ஏற்றப்பட்டு ருமேனியாவின் குக்கெல்ட் எனும் நகருக்கு வந்து அங்கிருந்து விமானம் மூலம் புதுடெல்லி அழைத்து வரப்பட்டோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

பாதுகாப்பாக ஊர் திரும்பிய முகமதுஆதிமை அவரது தாய் ஆயிஷா அம்மாள், தந்தை நவாஸ் அலி மற்றும் குடும்பத்தினா ஆனந்த கண்ணீர் மல்க வரவேற்றனர்.