Tamilசெய்திகள்

மிசோரம் மாநிலத்தின் முதல்வராக பதவி ஏற்கும் சோரம் தங்காவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

மிசோரம் மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் மிசோ தேசிய முன்னணி (எம்என்எப்) 26 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. ஆட்சியில் இருந்த காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்தது. 40 தொகுதிகளைக் கொண்ட சட்டசபையில் காங்கிரஸ் கட்சிக்கு 5 இடங்கள் மட்டுமே கிடைத்தன. பாஜக ஒரு இடத்தில் வெற்றி பெற்றது. தேர்தல் முடிவுகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதும், மிசோ தேசிய முன்னணி ஆட்சியமைக்கும் பணிகளைத் தொடங்கியது.

இதையடுத்து மாநில ஆளுநரைச் சந்தித்த சோரம்தங்கா, ஆட்சியமைக்க உரிமை கோரினார். அதனை ஏற்ற ஆளுநர், ஆட்சியமைக்க வரும்படி சோரம்தங்காவுக்கு அழைப்பு விடுத்தார். அதன்படி இன்று மதியம் ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு விழா நடைபெற்றது. மாநிலத்தின் புதிய முதலமைச்சராக சோரம்தங்கா பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் கும்மண்ணம் ராஜசேகரன் பதவிப்பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

சோரம் தங்காவை தொடர்ந்து 11 மந்திரிகளும் பதவியேற்றனர். இதில் ஒருவரான தன்லுயாவுக்கு துணை முதல்-மந்திரி பொறுப்பும் வழங்கப்பட்டு உள்ளது.

மிசோரமில் 3-வது முறையாக முதல்-மந்திரியாகி இருக்கும் சோரம் தங்கா, ஏற்கனவே 1998 மற்றும் 2003–ம் ஆண்டுகளிலும் மாநிலத்தின் முதல்-மந்திரியாக பதவி வகித்தவர்.

இந்நிலையில், மிசோரம் முதல்-மந்திரியாக பதவியேற்ற மிசோ தேசிய முன்னணியின் தலைவர் சோரம் தாங்காவிற்கு பிரமதர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பிரதமர் மோடி டுவிட்டரில் கூறியிருப்பதாவது:

“மிசோரம் முதல்-மந்திரி சோரம் தாங்காவிற்கு வாழ்த்துகள். அவரது பதவிக் காலங்களில் சிறந்த முறையில் ஆட்சி செய்ய வாழ்த்துகள். மக்களின் தேவையை அறிந்து நாட்டின் வளர்ச்சியை நோக்கி செயல்படுவோம்” இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *