மிசோரமில் கட்டப்பட்டு வரும் ரெயில்வே மேம்பாலம் இடிந்து விழுந்து 17 தொழிலாளர்கள் பலி

மிசோரம் மாநிலம் சைராங் பகுதி அருகே ரெயில்வே மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. தலைநகர் ஐஸ்வாலில் இருந்து 21 கிலோ மீட்டர் தொலைவில் இந்த பணி நடைபெற்று வருகிறது. 104 அடி உயரத்தில் இந்த மேம்பாலம் கட்டும் பணி மிகவும் விறுவிறுப்பாக நடந்து வந்தது.

வழக்கம்போல் இன்றும் பணி தொடங்கியது. 35 முதல் 40 தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில் காலை 10 மணியளவில் கட்டப்பட்டு வந்த அந்த ரெயில்வே மேம்பாலம் திடீரென இடிந்து விழுந்தது. அப்போது பணியில் ஈடுபட்டு இருந்த தொழிலாளர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கினார்கள். இடிபாடுகளுக்குள் சிக்கியவர்கள் அலறினார்கள்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் மீட்புக்குழு மீட்பு பணியில் ஈடுபட்டது. 17 தொழிலாளர்கள் மேம்பாலம் இடிந்து விழுந்ததில் பலியானார்கள். இடிபாடுகளில் இருந்து 17 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இன்னும் பலரை காணவில்லை. இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று கருதப்படுகிறது.

தொடர்ந்து மீட்பு பணி நடைபெற்று வருகிறது. இந்த விபத்துக்கான காரணம் எதுவும் தெரியவில்லை. முறையான பாதுகாப்பு அம்சங்களுடன் மேம்பாலம் கட்டும் பணி நடந்ததா? என்று விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ரெயில்வே மேம்பாலம் இடிந்து விழுந்ததில் பலியானவர்களின் குடும்பத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்து உள்ளார்.

இறந்தவர்களின் குடும்பத்திற்கு பிரதமர் நிவாரண நிதியில் இருந்து ரூ.2 லட்சம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். மேலும் காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: tamil news